கடந்த 1990-களில் கோலா பானங்கள் அருந்துவது பேஷனாக இருந்தது. ஆனால், அந்த மோகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வு ஒருபக்கம் உயர்ந்து வந்தாலும், ஆரோக்கிய பானங்களின் வருகை உயர்ந்ததும் ஒரு காரணம். அந்த வகையில் கோலா அல்லாத முக்கியமான பிராண்ட், பேப்பர் போட் (Paper boat). 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 200 மில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. சில நாள்களுக்கு முன் சிங்கப்பூரை சேர்ந்த ஜி.ஐ.சி நிறுவனம் 50 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.
தொழில் தொடங்கவைத்த ஸ்டார்ட் அப்
கோக கோலா நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருந்த நீரஜ் ககர் உருவாக்கிய நிறுவனம்தான் ஹெக்டர் பெவரேஜஸ். இதனுடைய பிராண்ட்தான் பேப்பர் போட். கோக கோலாவில் பணியாறியதால், இந்த வெற்றி எளிது என நினைக்கலாம். ஆனால், இரு ஆண்டுகள் பலவேறு தோல்விகளுக்குப் பிறகே முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறார்.
இவருடைய வார்த்தைகளில் சொல்ல வேண்டும் எனில், `வெற்றி எப்படி கிடைத்தது’ என எம்.பி.ஏ கல்லூரிகள் சொல்லிக் கொடுக்கும். ஆனால், வெற்றிக்கு முன்பான 100 தோல்விகள் எப்படிக் கையாள்வது எப்படி என்பதை யாரும் சொல்ல மாட்டார்கள். அதனை தோல்வியாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.’
யுனியன் கார்பைட், விப்ரோ, கோக கோலா நிறுவனங்களில் பணியாற்றியர் நீரஜ். கோக கோலா நிறுவனத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு என சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில், ஹீலியன் வென்ச்சர்ஸ் என்னும் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்தில் இன்டர்ன்-ஆக பணியாற்றும் வாய்ப்பு நீரஜ்க்கு கிடைக்கிறது. அங்கு முக்கியமான பணியே, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரசன்டேஷன்களைப் பார்ப்பதுதான். ‘ஒவ்வொருவரும் புதிய புதிய ஐடியாக்களுடன் தயாராகி வரும்போது நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்’ என்னும் கேள்வி எழவே, தொழில் தொடங்கத் தயாரானார் நீரஜ்.
புதிய தொழில் – Frissia…
பெவரேஜஸ் பிரிவில் இருந்ததால், மூன்று நண்பர்கள் இணைந்து கூட்டாக ரூ.1.75 கோடியை முதலீடு செய்தார்கள். இந்தியாவில் புரோட்டின் பற்றாக்குறை என்பது கண்கூடு. இந்தியாவின் அசைவம் சாப்பிடுபவர்கள் அதிகம் என்றாலும், புரோட்டீன் அளவு குறைபாடு என்கிற பிரச்னை எப்போதும் இருக்கவே செய்கிறது. இதனை நீக்குவதற்கு புரோட்டீன் பானத்தை அறிமுகம் செய்ய நீரஜ் மற்றும் குழுவினர் திட்டமிட்டனர்.
Frissia என்னும் பெயரில் பானத்தைத் தயாரித்தனர். ரூ.30 விலை. டாக்டர் மூலமாக கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமாக வேலை. அதனால் ஜிம் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என ஒவ்வொரு ஜிம்மாக ஏறினார்கள்.
இங்குதான் முக்கியமான தவறு நடந்தது. புரோட்டீன் பவுடரை சிறிய பாக்கெட்டுகளில் கொடுத்தார்கள். சிறிய பாக்கெட்டுகளில் கொடுக்கும்போது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பருகினால்தான் வாடிக்கையாளர்கள் மாற்றத்தை உணர்வார்கள். சிறிய பாக்கெட்டுகளில் இருக்கும்போது தினமும் வாங்க மாட்டார்கள். அதனால் பெரிய மாற்றம் நிகழாது. அதனால் விற்பனையும் உயரவில்லை. இதனை நிறுவனர்கள் உணர்வதற்குள் ரூ.80 லட்சம் கரைந்தது. முதல் முயற்சி தோல்வில் முடிந்தது.
எனர்ஜி ட்ரிங்…
முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும் அடுத்த முயற்சிக்குத் தயாரானார்கள். இந்த முறை எனர்ஜி ட்ரிங். இந்தப் பிரிவில் ரெட்புல், கிளவுட் என ஒன்பது பிராண்டுகள் இருந்தாலும் எனர்ஜி ட்ரிங் என்பது வளர்ந்துவரும் பிரிவுதான். அந்தத் திட்டத்தில்தான் Tzinga என்னும் பிராண்ட் உருவானது. Frissia தோல்விக்குப் பிறகு ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டு இரண்டாம் பிராண்ட் உருவாக்கப்பட்டது. முதல்முறை சொந்தப் பணத்தை போட்டு நஷ்டம் அடைந்தார்கள். ஆனால், இந்த முறை கூடுதல் திட்டத்துடன் முதலீட்டாளர்களைச் சந்தித்து நிதி திரட்டினார்கள். ஹீலியன் நிறுவனத்தின் கன்வாலிஜித், சில நண்பர்கள் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ஆகியோர் முதலீடு செய்தனர்.
ஆம் பானா உருவாக்கிய அதிசயம்
முதலீடு கிடைத்துவிட்டது. சிறப்பான பிரிவைத் தேர்வும் செய்தாகிவிட்டது, புராடக்ட்டும் நன்றாக இருக்கிறது. ஆனால், பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்த ஒரு புராடக்டை மட்டுமே நம்பி இருந்தால் வளரமுடியாது. வேறு ஏதாவது புதிய பிரிவை உண்டாக்கினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் நிறுவனம் வளரும் என்னும் நிலைமை இருந்தது.
அப்போது அலுவலக நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் அமெரிக்காவில் இருந்து திரும்புவதாக இருந்தது. அவர்கள் ஆம் பானா (மாங்காயில் இருந்து தயாரிக்கும் பானம்) பருக விரும்பினார்கள். ஆனால், சிறு கடைகளில் சாப்பிட்டால் சிக்கல் ஏற்படும். அதனால் ஓட்டல்கள் இருந்து வாங்கி வரச் சொன்னார்கள். ஆனால், பல பெரிய ஓட்டல்களில் தேடி அலைந்தபோது அப்படி ஒரு பானம் கிடைக்கவே இல்லை.
அதுதான் `பேப்பர் போட்’டுகான அடுத்த ஐடியாவாக அமைந்தது. இந்தியாவின் பாரம்பரியமான பானங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான் அடுத்தகட்டத் திட்டம். 2012-ம் ஜனவரியில்தான் இந்த ஐடியா அவர்களுக்கு வந்தது. கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் பல ஐடியாக்களுடன் போராடினார்கள்.
ஆம் பானாவைத் தயாரிக்கலாம் என முடிவெடுத்தாலும் மாங்காய் சப்ளை செய்பவர்கள் இல்லை. மாம்பழம் சப்ளை செய்பவர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒரு வழியாக மாங்காயைத் தருவித்து 2014 –ம் ஆண்டு ஆம் பானாவைத் தயார் செய்து விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து பல இந்திய பானங்களை அறிமுகம் செய்தது பேப்பர் போட். பானகம், நீர் மோர், இளநீர் என பல பானங்கள் பேப்பர் போட் தயாரித்தது. தற்போது ஸ்நாக்ஸ், சிப்ஸ், நட்ஸ் உள்ளிட்டவற்றையும் பேப்பர் போட் விற்பனை செய்கிறது.
நஷ்டத்தில் இருந்து லாபத்துக்கு…
2021-ம் நிதி ஆண்டு வரை நஷ்டத்தில் இருந்த நிறுவனம், கடந்த நிதி ஆண்டில் லாபம் அடைந்திருப்பதாக நீரஜ் தெரிவித்திருக்கிறார். புராடக்ட்டுகளில் கவனம் செலுத்தியது போலவே, மார்கெட்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தியது பேப்பர் போட்.
இந்த நிறுவனத்தின் அனைத்து விளம்பரங்களும் நினைவுகளைத் தூண்டும்படியே இருக்கும் என்பதால், பாரம்பரிய பானங்களை விரும்புவர்கள் வாங்கும் பிராண்டாக இருக்கிறது.
தொழில் தொடங்கியபின் முதலில் ஒரு தோல்வி, மனம் தளறாமல் உழைத்ததில் வெற்றி என இந்த நிறுவனத்தின் திருப்புமுனைகள் இன்ஸ்டண்ட் வெற்றி அடைந்தாக வேண்டும் என்கிற எண்ணத்தில் பிசினஸில் குதிப்பவர்களுக்கு பேப்பர் போட் நிறுவனத்தின் பிசினஸ் பயணத்தை மறக்காமல் மனதில் வைத்திருப்பது மிகவும் நல்லது!
(திருப்புமுனை தொடரும்)