புதுச்சேரி: “புதுச்சேரியில் மதுபான ஆலை முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”நாட்டில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டத்தால் டாலர் மதிப்பு உயர்ந்து, பணமதிப்பு குறைந்து வருகிறது. வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். டெல்லி, மேற்கு வங்க அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து, அங்கு ஆட்சியை கவிழ்க்க முயல்கின்றனர். இத்தகைய மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் விதமாக, வரும் 7-ம் தேதி முதல் ராகுல் காந்தி கன்னியகுமரியில் பாத யாத்திரை தொடங்கி, காஷ்மீரில் முடிக்கிறார்.
புதுச்சேரி காங்கிரஸார் சார்பில் 7-ம் தேதி வில்லியனூரில் பாதயாத்திரை தொடங்கி புதுச்சேரி நகர் வரை மேற்கொள்ளப்படும். ராகுல் தலைமையில் நடைபெறும் பாதயாத்திரையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்போம்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரைத்த மாவையே திருப்பி அரைத்துள்ளார். பிரதமர், மத்திய அமைச்சர்களை அவர் சந்தித்தும், கடந்த 2 ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. கடந்த தேர்தலின்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்காக பாஜகவுடன் ரங்கசாமி கூட்டணி சேர்ந்தார். ஆனால், மத்திய அரசு அதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. எதை வைத்து பாஜகவுடன் ரங்கசாமி கூட்டணி சேர்ந்தார். இது என்.ஆர்.ஆட்சியின் வீழ்ச்சியை காட்டுகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு பட்ஜெட்டிலயே விவசாய கடன் ரத்து என அறிவித்தார். இப்போது மீண்டும் ரத்து என அறிவிக்கிறார்.
100 வயதானவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும் என்கிறார். புதுச்சேரியில் 100 வயதை தாண்டியவர்கள் 20 பேர் கூட இல்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்கிறார். புதுச்சேரியில் 1 லட்சத்து 87 ஆயிரம் சிவப்பு ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நலத்திட்டங்களை பெறுகிறார்கள். பிறகு எப்படி இவர்களுக்கு ரூ.1,000 வழங்க முடியும். இந்த அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அனைத்து துறைகளும் ஊழல் மயமாகிவிட்டது. அமைச்சர் அலுவலகங்கள் ஊழல் ஏஜெண்டுகளின் அலுவலகமாக மாறிவிட்டது.
புதுச்சேரியில் 6 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக, பாஜக எம்எல்ஏவே சட்டப்பேரவையில் புகார் கூறியுள்ளார். மதுபான ஆலை அனுமதி குறித்து, அரசிடமிருந்து வெளிப்படையான தகவல் இல்லை. மதுபான ஆலை அனுமதி விவகாரத்தில் நிறைய விதிமீறல்கள் நடந்துள்ளன.
இந்த விவகாரத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன். இதற்கு பதில் சொல்ல ரங்கசாமி தயாரா? புதுச்சேரியில் மதுபான ஆலை முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காரைக்காலில் தொழிற்சாலைகள் தொடங்க, ரூ.1.5 கோடி லஞ்சம் பெற்று, 100 ஏக்கர் நிலத்தை வழங்கியதில், முறைகேடு நடந்துள்ள புகார் குறித்தும் விசாரிக்க வேண்டும்” என்று நாராயணசாமி கூறினார்.