புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்தில் மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு பூர்வாங்க அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. பெரிய மதுபான தொழிற்சாலைகள் கொண்டுவருவதற்கு முகாந்திரம் இல்லை. அதனால் புதுச்சேரி இளைஞர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என தெரியவில்லை. சட்டசபையில் அதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் போதிய அளவு மதுபான ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் உற்பத்தியாகும் மதுவை குடித்து ஏற்கனவே மக்கள் மயக்கநிலையில்தான் வாழ்கின்றனர். நாட்டிலேயே அதிக விதவைகள் உள்ள மாநிலமாக புதுச்சேரி காட்டப்படுகிறது. அப்படியிருக்க புதிய மதுபான தொழிற்சாலைகள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? அதிக குடிநீரை எடுத்து பயன்படுத்தக்கூடிய ஆலைக்கு எப்படி அனுமதி தருகின்றனர்?
நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10,000 லிட்டர் நிலத்தடி நீரைத்தான் எடுக்க வேண்டும் என்ற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவையும் முடக்கம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது. புதுச்சேரியில் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதுபோன்ற நிலையில் அதிக நிலத்தடி நீரை எடுக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி தருவது மக்களை வஞ்சிக்கும் செயல். அதோடு மட்டுமின்றி மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி தருவதில் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளது. மதுபான ஆலை அனுமதியில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க எம்எல்ஏக்களே புகார் கூறியுள்ளனர். அதற்கும் இந்த அரசு பதிலளிக்கவில்லை.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் மது கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் பா.ஜ.க குற்றம் சுமத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பா.ஜ.கவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிக்கிறது. டெல்லிக்கு ஒரு நீதி, புதுவைக்கு ஒரு நீதியா? இதில் கவர்னரின் நடவடிக்கை என்ன? புதுச்சேரியில் இயங்கி வந்த ஒரு மதுபான தொழிற்சாலையில் முறைகேடு நடைப்பெற்றதாக முந்தைய ஆட்சியில் ஆளுநர் நடவடிக்கை எடுத்து மூடினார்.
அங்கு குற்றங்கள் நடைபெற்றாதாக நீதிமன்றமோ, அரசோ உறுதிப்படுத்தவில்லை. தற்போது அந்த தொழிற்சாலைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எந்தவித விசாரணையும் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டது எப்படி? ஏற்கனவே கூறிய முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு விட்டதா? 100 வயதை கடந்தவர்களுக்கு ரூ.7,000/- உதவித்தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. மதுவை அதிகப்படியாக உற்பத்தியும், விற்பனையும் செய்ய அனுமதித்துவிட்டு 100 வயதை தாண்டியவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது எப்படி சரியாக இருக்கும்? மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி புதுச்சேரியில் பெண்களே அதிகம் உள்ளனர். ஆண்களில் பலர் குறைந்த வயதில் உயிரை விடுவதற்கு மதுபழக்கமே காரணமாக உள்ளது. புதுச்சேரியில் போதை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதற்கான நோக்கம் என்ன? ஒரு பக்கம் மது உற்பத்தி, விற்பனை. மறுபக்கம் போதை தடுப்பு அமைப்பா? கடந்த 2001-ம் ஆண்டு ரங்கசாமி முதல்வராக பதவியேற்றபோது புதுச்சேரியில் இருந்த மதுபான கடைகளின் எண்ணிக்கை 140 தான். ஆனால் தற்போது 500-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன.
இடைப்பட்ட காலங்களில் மற்றவர்கள் முதல்வர்களாக இருந்தபோது எந்த மதுபானக்கடைக்கும் அனுமதி தரவில்லை. உயர்த்தப்பட்ட அனைத்து மதுபான கடைகளும் முதல்வர் ரங்கசாமியால் அனுமதி அளிக்கப்பட்டதுதான். அதிக மதுபான கடைகளை திறப்பதும், மக்களை குடி மயக்கத்திற்கு தள்ளுவதுமே இந்த ஆட்சியின் நோக்கம். புதிய மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காங்கிரஸ் சார்பில் சி.பி.ஐக்கு நேரடியாக மனு அளிப்போம். பதவியை தேடி காங்கிரஸை விட்டு அகில இந்தியளவில் வெளியேறுகின்றனர். அதேபோல குலாம்நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் வெளியேறியுள்ளனர். நாடு முழுவதும் பிரதமர் மோடியையும், பா.ஜ.கவை எதிர்க்கும் சக்தியாக காங்கிரஸும், ராகுல்காந்தியும் திகழ்கின்றனர். தேர்தலோ, போட்டியோ இன்றி ராகுல்காந்தியை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிஸாரின் விருப்பம்” என்றார்.