புரட்டாசி பிறந்ததுமே திருமலை திருப்பதி களைகட்டத் தொடங்கிவிடும். பெருமாள் பக்தர்கள் வீட்டில் கோவிந்தா போட்டு, தளிகை செய்து வழிபாடு செய்வதோடு திருமலையை நோக்கிப் பயணிக்கவும் தொடங்குவர். காரணம் இந்த மாதத்தில் பெருமாளை வழிபடுவது மிகவும் விசேஷம். திருமலையில் புரட்டாசி மாதம் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். அவற்றில் முக்கியமானது நவராத்திரி பிரம்மோற்சவம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பரவல் காரணமாக ஶ்ரீவாரி பிரம்மோற்சவம் பக்தர்கள் அனுமதி இன்றி ஏகாந்தமாக நடைபெற்றது. இந்த ஆண்டு கோவிட் பரவல் கட்டுப் பாட்டில் உள்ளதாலும் மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்காததாலும் பொதுமக்களின் பங்கேற்போடு பிரம்மோற்சவத்தை நடத்துவது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணையை ஏற்கெனவே தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் மட்டுமல்ல ஆவணி மாதத்தில் மீதமிருக்கும் நாள்களிலும் பல்வேறு விழாக்கள் திருமலையில் கொண்டாடப்பட இருக்கின்றன.
செப்டம்பர் மாதம் 6 மற்றும் 21 – ம் தேதிகளில் ஏகாதசி உற்சவம் கொண்டாடப்படுகிறது. 7 ம் தேதி வாமன ஜயந்தி கொண்டாடப்பட இருக்கிறது. 9 ம் தேதி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு அனந்த பத்மநாப விரதம் கடைப்பிடிக்கப்படும். 11 ம் தேதி மகாளய பட்சம் தொடங்கும். செப்டம்பர் 13 ம் தேதி ஆந்திராவில் விசேஷமாகக் கடைப்பிடிக்கப்படும் கௌரிபூஜையான உண்ட்ராலு தட்டு என்னும் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விழாவும் திருமலை திருப்பதியில் கொண்டாடப்படும்.
இதன்பின்பு புரட்டாசி பிறந்ததும் திருமலை பிரம்மோற்சவத்துக்குத் தயார் ஆகிவிடும். 20 ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். 25 ம் தேதி மகாளய அமாவாசை. அடுத்த நாள் பிரம்மோற்சவம் தொடங்கும். 26 ம் தேதி அங்குரார்ப்பணமும், 27 ம் தேதி கொடியேற்றமும் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வார். அக்டோபர் 1 ம் தேதி புகழ்பெற்ற கருட சேவை நடைபெறும். அக்டோபர் 5 ம் தேதி சக்ர ஸ்நானத்துடன் விழா முடிவடையும். சாதாரணமாக ஒரு நாளைக்கு 60,000 முதல் 70,000 பக்தர்கள் வரை வந்து தரிசனம் செய்வார்கள். ஆனால் பிரம்மோற்சவ நாள்களில் ஒரு லட்சத்துக்கும் மேலாக பக்தர்கள் குவிவார்கள். எனவே இந்த நாள்களில் உங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது கூடுதல் கவனம் அவசியம்.