அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான சிக்கல் எழுந்த போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழுவில் பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றது செல்லாது என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அதிமுகவில் ஜுன் 23-க்கு முன்பிருந்த நிலை நீடிக்க வேண்டும். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று (செப்.2) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பார்க்கப்பட்ட நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வந்துள்ளது.
இந்நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil