பெங்களூரு: பள்ளிச் சிறுமிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக பதிவான புகாரில் கைது செய்யப்பட்ட கர்நாடக மடாதிபதி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ப்ரிஹான் மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு. இவர் மடத்திற்கு உட்பட்ட பள்ளியில் படித்த இரண்டு மாணவிகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமிகள் புகார் கூறினர். இதனையடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எந்நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழலில் இருந்த அவரை சித்ரதுர்கா போலீஸார் நேற்று பின்னிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் சித்ரதுர்கா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக சிவமூர்த்தி சரணரு தன்னைச் சுற்றி ஏதோ சதிவலை பின்னப்படுகிறது. அதிலிருந்து விடுபட்டு வெளிவருவேன் என்று கூறியிருந்தார். ஆனால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் ஆணையம், தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளது. வழக்கு சாராம்சம், மருத்துவப் பரிசோதனை, முதல் தகவல் அறிக்கை, போலீஸ் விசாரணை உட்பட அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும்படி கேட்டு, சித்ரதுர்கா மாவட்ட எஸ்.பி.,க்கு, குழந்தைகள் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.