சியோல்: தென் கொரியாவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வரும் நிலையில், மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், நாட்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை வழங்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் பிறப்பு விகிதம் சமீப காலமாக குறைந்து வருவது அந்த அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அந்த நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதுவரை இல்லாத வகையில் பிறப்பு விகிதம் சரிந்தது.
4.3 சதவீதம் குறைந்தது
கடந்த ஆண்டு வெளியிட்ட தரவுகளின் படி, தென்கொரியாவில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 600 ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11,800 குறைவு ஆகும். சதவீதத்தின் அடிப்படையில் 4.3 சதவீதம் குறைந்தது. எனினும், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் கருவுறுதல் விகிதம் கடந்த ஆண்டு சற்று அதிகரித்தது.
மக்கள்தொகை சரிவு
தென்கொரியாவில் கடந்த 1970-ஆம் ஆண்டு புதிதாக பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியிருந்தது. ஆனால் அதன்பிறகு தென்கொரியாவில் தொடர்ந்து இந்த எண்ணிக்கை சரிந்து கொண்டே வந்தது. 2001 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை பாதியாக சரிந்தது. அதாவது அந்த அண்டு புதிதாக பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை 5 லட்சமாக சரிந்தது. 2002 ஆம் ஆண்டில் 4 லட்சமாகவும் குறைந்தது.
குறைந்த பிறப்பு விகிதம்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பில் (OECD) உறுப்பு நாடுகளாக உள்ள 38 நாடுகளில் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடாக தென்கொரியா உள்ளது. பல குழந்தைகளை கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைவதாக தரவுகள் கூறுகின்றன. 2021 ஆம் ஆண்டில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 21,000 ஆக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 5.9 சதவீதம் குறைந்துள்ளது.
மாதம் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை
குழந்தை பிறப்பு விகிதத்தில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதால், குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் பிறப்பு விகிதம் குறைந்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும் தென்கொரியா அரசு அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இதன்படி, புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்த்நைக்கும் 1 மில்லியன் வான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 60 ஆயிரம் ரூபாயை மாதாந்திர உதவித்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளது. ஒரு வயது வரை முழு உதவித்தொகை, 2-வது வருடத்தில் பாதி அளவு உதவித்தொகையும் அளிக்கப்பட உள்ளது. வளர்ந்த நாடான தென்கொரியாவில் தற்போதைய மக்கள் தொகை 5 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.