மாற்றுச்சான்றிதழ் வழங்க ரூ.1.50 லட்சம்? பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்!

திருச்சி சமயபுரம் அடுத்துள்ள சிறுகனூரில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இப்பள்ளியில் பயின்ற இரு மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் தர மறுப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவித்து வருவதாக பெற்றோர் தரப்பில் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் பக்ருதீன் ஃபகமிதா தம்பதியினரின் மகன்கள் பஹிம் பாக்கர்(16), பாரிஸ் பாக்கர்(14). இவர்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சிறுகனூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக பக்ருதீன் கொடைக்கானலுக்கு இடம் பெயர்ந்ததால் மகன்களின் மாற்று சான்றிதழை வழங்கும்படி பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார்.

ஆனால் பள்ளி நிர்வாகம் மாற்று சான்றிதழை தர மறுத்ததுடன் பள்ளிக்கும் விடுதிக்கும் கட்டண தொகையை கேட்டு பெற்றுள்ளனர். பள்ளி கட்டணத்தை செலுத்திய பின்னரும் பல்வேறு காரணங்களை சொல்லி பள்ளி நிர்வாகம் மாணவர்களின் மாற்று சான்றிதழை தராமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அலைக்கழித்துள்ளது.

இதனால் மாணவர்கள் இரண்டு பேரும் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மன வேதனையில் இருந்த மாணவர்களின் தந்தை பக்ருதீன் மகன்களின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் வேண்டி பள்ளிக்கு தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட முறை வந்து கோரிக்கை கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.

இதற்கு கொஞ்சமும் செவி சாய்க்காமல் பள்ளி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் தந்தை காலையில் மகன்களுடன் பள்ளிக்கு சென்று மாற்றுச் சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது மாற்றுச்சான்றிதழ் தருவதற்கு பக்ருதினிடம் பள்ளி நிர்வாகம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரை மாலை நேரம் வரை காத்திருக்க வைத்த பள்ளி நிறுவனம் எந்த பதிலும் கூறாமல் அலைக்கழித்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து வேறு வழியின்றி ஃபக்ருதீன் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய சிறுகனூர் போலீசார் இது பள்ளி கல்வித்துறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் இதுகுறித்து விசாரணை செய்து பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் இரு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.