தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், சோனு சூட், கிஷோர் குமார், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘ஆச்சார்யா’. இந்தப் படத்தை கொரட்டலா சிவா எழுதி இயக்கி இருந்தார். மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த இப்படம் கடைசியில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. அது மட்டுமில்லாமல், நிர்ணயித்த தேதிக்கு முன்னரே ஓ.டி.டி-யிலும் வெளியானது.
இதனிடையே தனது அடுத்த படமான ‘காட்ஃபாதர்’ தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் சிரஞ்சீவி. அப்போது பேசியவர், “கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, திரையரங்குகளுக்கு வருபவர்கள் குறைந்துவிட்டார்கள் என்ற கவலை உள்ளது. ஆனால் மக்கள் ஒட்டுமொத்தமாகத் திரையரங்குகளுக்கு வர விரும்பவில்லை என்று இதற்கு அர்த்தமில்லை.
திரைப்படங்களின் கன்டென்ட் நன்றாக இருந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு நிச்சயம் வருகிறார்கள். ‘பிம்பி சாரா’, ‘சீதா ராமம்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ போன்ற படங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆக, சினிமாவில் உள்ள நாம் இனி நல்ல திரைக்கதை மற்றும் நல்ல உள்ளடக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிக் கவனம் செலுத்தவில்லை என்றால், பார்வையாளர்கள் நமது படங்களை நிராகரிப்பார்கள்.
மோசமான படங்கள் வெளியான இரண்டாவது நாளிலேயே நிராகரிக்கப்படுகின்றன. இந்த ட்ரெண்டுக்கு நானே சாட்சி. சமீபத்தில் வெளியான எனது படம் கூட திரையிட்ட 2வது நாளிலிருந்தே நிராகரிக்கப்பட்டது” என்று அவருடைய ‘ஆச்சார்யா’ படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.