சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, ஆனைகுடி, கீழகாஞ்சிரங்குடி, கோப்பேரிமடம், திருப்பாலைகுடி, பனைக்குளம், நரிப்பாலம், தேவிப்பட்டினம், சம்பை, முத்துரெகுநாதபுரம், வாலிநோக்கம், மாரியூர் தரவை, மூக்கையூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உப்பள பாத்திகளில் கடல்நீர் பாய்ச்சப்பட்டு உப்பு விளைவிக்கப்பட்டது. இந்தாண்டு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு விளைச்சல் அமோகமாக இருந்தது.
இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழையும் ஒரு சில வாரங்களில் துவங்க உள்ளது. இதனால் உப்பளத்தில் உள்ள உப்புகள் நனைந்து வீணாகும் நிலை உள்ளது. எனவே உப்பை சேகரித்து பாதுகாத்தல், தொழிற்சாலைக்கு அனுப்புதல் போன்ற பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உற்பத்தியாகும் உப்பை இங்குள்ள அரசு தொழிற்சாலையில் நவீனமுறையில் இயற்கையான அயோடின் கலந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. பொதுவிநியோக திட்டத்திற்காக அரசு பயன்பாட்டிற்கு போக மீதவற்றை வெளிச்சந்தை மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் விற்று லாபத்துடன் இயங்கி வருகிறது. அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் உப்பள கரையில் ஆங்காங்கே குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
மழை பெய்தால் கரைந்தோடி நாசமாகும் அபாயம் உள்ளது. எனவே கரையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியலில் கிடுகு, தார்ப்பாய் போன்ற பாதுகாப்பு உறைகளை கொண்டு பாதுகாப்பாக மூடிவைத்தல், பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுச்செல்லுதல் உள்ளிட்ட பணியில் உப்பு நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளனர்.