புதிய வழக்குகள் மற்றும் பழைய வழக்குகள் இனி இந்த பட்டியலின் படி தான் நடைபெறும் என புதியதாக தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு லலித் பதவி ஏற்றதற்கு பிறகு உச்சநீதிமன்றத்தின் நடைமுறைகள் பலவும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக புதிய வழக்குகள் காலையிலும், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பிற்பகலிலும் பட்டியலிடப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது. இதே போல் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வும் வாரத்தில் மூன்று நாட்கள் அமர்ந்து முக்கிய வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் மாநிலங்களவை தேர்தல் தொடர்பான ஒரு வழக்கில் வழக்கை விரைந்து பட்டியலிட தலைமை நீதிபதி முன்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அப்போது தலைமை நீதிபதி எந்த ஒரு புதிய வழக்காக இருந்தாலும் 10 நாட்களுக்குப் பிறகு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும், 10 நாட்கள் கூட பொறுக்க முடியாதது என கருதப்படும் மிக முக்கியமான வழக்குகள் மட்டுமே விரைந்து விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்களுக்கான உடைகளை முறையாக அணிந்து வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு லலித் பதவி ஏற்றதற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து அமர்வுகளிலும் நாள் ஒன்றுக்கு விசாரிக்கப்படும் வழக்குகளின் சராசரி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM