தென்காசி மாவட்டத்தில் இருக்கும் சங்கரன்கோவில் அருகே குலசேகரமங்கலம் பகுதியில் வசித்து வரும் வெண்ணியார் மற்றும் அமல்ராஜ் என்ற தம்பதிக்கு ராஜலட்சுமி(வயது 21) என்ற பெண்ணும் உதயஜோதி(வயது 19) என்ற மகனும் இருக்கின்றனர். ராஜலட்சுமி 2 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்து வந்துள்ளார்.
இந்த வருடம் மூன்றாவது முறையாக நம்பிக்கையுடன் தேர்வு எழுதியுள்ளார். இத்தகைய சூழலில், வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து, தேர்வுக்கான பதில் வெளியிடப்பட்டது.
இதை கண்ட ராஜலட்சுமி தான் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்று பயந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எதிர் வருகின்ற நீட் தேர்வு முடிவுகள் காரணமாக மிகவும் மன உளைச்சலில் இருந்த ராஜலட்சுமி விரத்தியில் தாய் தந்தையின் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாது என்று மனமடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து, அறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சி மையத்தில் ராஜலட்சுமி சேர்ந்து படித்து வரும் நிலையில் மூன்றாவது முறையும் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் திமுக நீட் தேர்வு ரத்து செய்து விடும் என்று வாக்குறுதி அளித்த நிலையில், அடுத்தடுத்து நிகழும் நீட் தற்கொலைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.