இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகள், கோயில்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரூபி ஆசிப் கான் என்ற முஸ்லிம் பெண் தனது வீட்டிற்கு விநாயகர் சிலை ஒன்றை வாங்கி வந்திருக்கிறார். அவர் விநாயகர் சிலையை வாங்கி வந்ததற்கு அவருடைய வீட்டில் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. விநாயகருக்கு செய்ய வேண்டிய அனைத்து பூஜை, சம்பிரதாயங்களையும் ரூபி செய்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய ரூபி ஆசிப் கான், “விநாயகர் சிலையை ஏழு நாள்கள் எங்கள் இல்லத்தில் வைத்திருப்போம். அதன் பிறகு நீரில் கரைப்போம். நானும் என்னுடைய குடும்பத்தினரும் இறைவனுக்கு செய்ய வேண்டிய அனைத்து விதமான பூஜைகளையும், சம்பிரதாயங்களையும் செய்தோம். விநாயகர்மீது எனக்கு அபிரிமிதமான நம்பிக்கை இருக்கிறது.
நான் விநாயகர் சிலையை எனது வீட்டிற்கு வாங்கி வந்ததற்கு என்னுடைய குடும்பத்தினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நானும், என் குடும்பத்தினரும் மத வேறுபாடின்றி அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறோம்” என்றார்.
இஸ்லாமியப் பெண்ணின் இந்த செயல் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதத்தில் இருப்பதாக, அவர் விநாயகரை வழிபாடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.