ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த முன்னாள் ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரைச் சேர்ந்த ரிச்பால் சிங் ஜாகர் (57), இந்திய ராணுவத்தின் ரஜ்புத் ரெஜிமென்ட் பிரிவில் ‘நாயக்’ ஆக 17 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் மீது கார் மோதியதில் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து சிகார் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூரில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் அவரது மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜாகரின் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகிய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
ரிச்பால் சிங் ஜாகரின் உடல் உறுப்புகள் தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்ற அமைப்புக்காக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஜாகரின் ஒரு சிறுநீரகம், மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோல மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கல்லீரலும், எடர்னல் மருத்துவமனைக்கு இதயமும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த உறுப்புகள் தேவையானவர்களுக்கு பொருத்தப்பட்டன. இதன்மூலம், தான் உயிரிழந்த போதும் 4 பேருக்கு புது வாழ்வு கொடுத்துள்ளார் முன்னாள் ராணுவ வீரர் ஜாகர்.