இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் அங்கு ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் அந்நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவின் நாசா செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்தில் வெள்ள பாதிப்பால் பாகிஸ்தான் மாகாணங்கள் தனித் தீவுகளாக மாறியிருப்பது தெரியவந்திருக்கிறது.
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற மழைப்பொழிவு பாகிஸ்தானில் பதிவாகவில்லை. பல இடங்களில் மழை பெய்து வரும் போதிலும் அந்நாட்டின் சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில்தான் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
மூன்று வாரங்களாக அந்த மாகாணங்களில் பெய்து வரும் கனமழை இப்போது வரை சற்று கூட குறையவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாகாணங்களில் நூற்றுக்கணக்கான மாவட்டங்களும், ஆயிரக்கணக்கான கிராமங்களும் வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியுள்ளன.
மழை வெள்ளத்துக்கு 1,186 பேர் பலி
ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே, வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதியில் இருந்து தற்போது வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி இதுவரை 1,186 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 443 பேர் குழந்தைகளும் அடங்குவர். அதிகபட்சமாக சிந்துவில் மட்டும் 506 பேர் உயிரிழந்துள்ளனர். பலுசிஸ்தானில் 334 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மீட்பு படையினரும் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான வீடுகள் சேதம்
கனமழையால் தற்போது வரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து உணவில்லாமல் தவித்து வருவதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. 3,000 கிமீ சாலைகள், சுமார் 150 பாலங்கள் என நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாசா புகைப்படம் வெளியீடு
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மோடீஸ் செயற்கைக்கோள் பாகிஸ்தானை எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கடந்த ஆண்டு எப்படி இருந்தது என்பதையும், தற்போது வெள்ள பாதிப்புகளுக்கு பிறகு அந்த மாகாணம் எப்படி இருக்கிறது என்பதையும் ஒப்பீடு செய்து வெளியாகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில், சிந்து மாகாணத்தில் பாயும் மிகப்பெரிய ஆறான இந்தூஸ் நதியிலும், அதன் துணை ஆறுகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது.
தனித்தனி தீவுகளாக மாறிய மாகாணம்
வெள்ளத்தால் இந்தூஸ் நதி, அதன் துணை ஆறுகள், அதையொட்டியுள்ள நீரோடைகள் ஆகியவை பல மடங்கு பெரிதாக ஒரு சிறிய கடலை போல மாறி ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனால் அங்கிருந்த நிலப்பகுதிகள் முழுவதையும் இந்த காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்திருப்பதை இந்த புகைப்படம் தெளிவாக காட்டுகிறது. மேலும், வெள்ளத்தால் சிந்து மாகாணத்தில் உள்ள மாவட்டங்களும், பிராந்தியங்களும் தனித்தனி தீவுகளாக மாறியுள்ளதையும் இந்த புகைப்படம் மூலம் நமக்கு தெரியவருகிறது.
பாகிஸ்தான் பாதிப்புகளுக்காக ஐநா மத்திய அவசரக்கால நிதியம் ஏற்கனவே 3 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க கனமழை ஆகஸ்ட் 30 வரை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.