புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடி வகுப்பை சேர்ந்த 71 வயது கமலா பூஜாரியை நடனமாட வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா பூஜாரி. இவருக்கு வயது 71. பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். மேலும் பாரம்பரியமான உள்நாட்டு விதை சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்ததற்காகவும், 100க்கும் மேற்பட்ட உள்நாட்டு விதைகளை பாதுகாத்ததற்காகவும் இவருக்கு கடந்த 2019ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
சிறுநீரக கோளாறு
இந்நிலையில் தான் கமலா பூஜாரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
நடமனமாட வற்புறுத்தல்
இந்நிலையில் அவர் உடல்நலம் குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் தான் ஐசியூவில் கமலா பூஜாரியை நடனம் ஆட வற்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதில் கமலா பூஜாரி, சமூக சேவகர் மம்தா பெஹரா உள்ளிட்டவர்கள் நடனமாடுகின்றனர்.
நடனமாட விரும்பவில்லை
இதுபற்றி கமலா பூஜாரி கூறுகையில், ‛‛நான் ஒருபோதும் நடனமாட விரும்பவில்லை. ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பலமுறை மறுத்தேன். ஆனால் அவர் (மம்தா பெஹெரா) கேட்கவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருந்த நிலையில் நடனமாட கூறினர்” என்றார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
உற்சாகப்படுத்தவே நடனமாம்
இதுபற்றி மருத்துவமனை பதிவாளர் டாக்டர் அபினாஷ் ரவுத் கூறுகையில், ‛‛கமலா பூஜாரியை நடனமாட செய்ததாக கூறப்படும் பெண் அவர் அனுமதிக்கப்பட்ட சிறப்பு அறைக்கு சென்றது உண்மை என கூறியுள்ளார்” என்றார். இதுபற்றி மம்தா பெஹெரா கூறுகையில், ‛‛கமலா பூஜாரி மிகவும் உற்சாகமின்றி இருந்தார். அவரை உற்சாகப்படுத்ததே இதனை செய்தோம்” என கூறியுள்ளார்.
நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
இருப்பினும் மம்தா பெஹெராவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி பழங்குடியின சங்க தலைவர் ஹரிஷ் முதுலி கூறுகையில், ‛‛இந்நிலையில் சமூக சேவகர் மம்தா பெஹெரா மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்” என கூறியுள்ளார்.