ஹரியான மாநில பாஜக பிரமுகரும், அம்மாநில முதல்வருக்கு நெருக்கமானவராகவும் இருந்துவந்த சுக்பீர் கட்டானா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஹரியான மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குர்கானில் உள்ள சோஹ்னா மார்க்கெட் கமிட்டியின் முன்னாள் துணைத் தலைவராகவும், முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு நெருக்கமானவராகவும் இருந்துவந்த சுக்பீர் கட்டானா இன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குர்கானில் உள்ள ஒரு துணிக்கடையில் நின்றிருந்த சுக்பீர் கட்டானா மீது, அங்கு நுழைந்த 5 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதையடுத்து கடை ஊழியர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே சுக்பீர் கட்டானா இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
சுக்பீர் கட்டானா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் யார்? என்ன காரணத்திற்காக சுக்பீர் கட்டானா கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த ஹரியானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: சோலோ ரவுடியாவதே எனது லட்சியம்: ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞரை தேடும் போலீசார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM