22ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை இந்த வாரத்தில் அறிந்துகொள்ளக்கூயதாக இருக்கும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்., அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவர் மேலும் தெரிவிக்கையில் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு கிடைக்கப்பெற்ற பின்னர் இந்த திருத்த சட்டம் மூலத்தை நாட்டுக்கு பொருத்தமான வகையில் நிறைவேற்ற கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
இன்று அரச துறையில் மாத்திரமன்றி தனியார் துறையிலும் ஊழல் இடம்பெறுவதாக குறிப்பிட்ட அமைச்சர்
ஊழல் மோசடியை தவிர்த்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கத்திற்காக சுமார் 12 சட்டமூலங்கள் கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன எனவும் கூறினார்.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலஞ்சம் ஒழிப்பு சட்டத்தை போன்று சொத்துக்களை வைப்பீடு செய்யும் சட்டத்திலும் மாற்றத்தை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
நிதி முகாமைத்துவத்தில் நாடு தவறு செய்து விட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் நிறைவேற்று அதிகார மூலம் தனிப்பட்ட தீர்மானத்தை மேற்கொள்வது நாட்டின் பொருளாதார நெருக்கடி உருவாவதற்கு அழுத்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது புதிய பயணத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.