கொச்சி: முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பல் இன்று இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டிருப்பதை உலக நாடுகளே ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.
மற்ற நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் ஒரு போர்க் கப்பலை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. உலகிலேயே அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகளில் மட்டும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்கள் இருக்கின்றன.
அந்த வகையில், ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை உருவாக்கி இந்தியாவும் தற்போது மேற்குறிப்பிட்ட வல்லரசு நாடுகளின் பட்டியலில் இணைந்திருக்கிறது.
ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற பெயரை ஏற்கனவே நாம் கேள்விப்பட்டிருப்போம். அதுவும் இந்தியா பயன்படுத்தி வந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் தான். ஆனால், அது பிரிட்டிஷாரால் பயன்படுத்தப்பட்டு, சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியாவுக்கு விற்கப்பட்ட போர்க்கப்பல் ஆகும்.
ஐஎன்எஸ் விக்ராந்த் – I
1961-இல் இந்தியக் கடற்படையில் இணைந்த ஐஎன்எஸ் விக்ராந்த் – I காட்டிய வீரபராக்கிரமம் கொஞ்சம் நஞ்சமல்ல. 1971-ம் இந்தியா – பாகிஸ்தான் போரில் கிழக்கு வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவத்தை அப்படியே முடக்கிப்போட்ட பெருமை ஐஎன்எஸ் விக்ராந்தையே சாரும். நீண்டநெடுங்காலமாக பணியாற்றிய அந்த ஐஎன்எஸ் விக்ராந்துக்கு 1997-இல் இந்தியக் கடற்படை ஓய்வு கொடுத்தது.
ஐஎன்எஸ் விக்ராந்த்துக்கு பிறகு இந்தியக் கடற்படையில் விமானம் தாங்கிப் போர்க்கப்பலாக ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மட்டுமே இருந்தது. அதுவும் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது ஆகும்.
ஐஎன்எஸ் விக்ராந்த் 2.0
அந்த சமயத்தில்தான், இந்தியக் கடற்படைக்கு மற்றொரு விமானம் தாங்கி போர்க்கப்பலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கு வந்தது. அதன் விளைவாக, ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை தயார் செய்யும் பணி 2003-ம் ஆண்டு கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் 13 ஆண்டுகால உழைப்பில் நவீன ஐஎன்எஸ் போர்க்கப்பல் உருவாக்கப்பட்டது. 2017-இல் இந்தியக் கடற்படையில் இணைந்தாலும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு இன்றுதான் அக்கப்பல் நாட்டுக்காக அதிகாரப்பூர்வமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
18 அடுக்குகள் – 2,400 அறைகள்
தற்போது இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டிருக்கும் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மிக பிரம்மாண்டமானது. சுமார் ரூ.20,000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் 262 மீட்டர் (860 அடி) நீளமும், 60 மீட்டர் (197 அடி) உயரமும் கொண்டது. அதாவது கப்பலின் பரப்பளவானது மூன்று கால்பந்தாட்ட மைதானத்துக்கு சமம் ஆகும். கப்பலின் மொத்த எடை 45,000 டன். ஒரே சமயத்தில் 30 போர் விமானங்களையும், 10 ஹெலிகாப்டர்களையும் இந்தக் கப்பலில் நிறுத்த முடியும். 18 அடுக்குகளை கொண்ட இந்த ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் 2,400 அறைகள் உள்ளன. ஒரே சமயத்தில் 1,700 பேர் இந்த பிரம்மாண்ட கப்பலில் பயணிக்க முடியும். இதில் பெண் கடற்படை வீராங்கனைகளுக்கு தனியாக அறைகள் இருக்கின்றன.
அதிநவீன ஆயுத தளவாடங்கள்
28 நாட்டிக்கல் வேகத்தில் செல்லும் இந்தக் கப்பலில் ஒருமுறை எரிபொருள் நிரப்பிவிட்டால் எங்கும் நிற்காமல் 7,500 நாட்டிக்கல் தூரம் வரை செல்லக்கூடியது. இந்தக் கப்பலில் மிகப்பெரிய உணவு தயாரிக்கும் இடமும், 16 படுக்கை வசதிகளை கொண்ட அதிநவீன மருத்துவமனையும் உள்ளன. இந்தக் கப்பலை இயக்க 4 இன்ஜின்கள் உள்ளன. இந்த 4 இன்ஜின்களும் 88 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் திறன் கொண்டது. அதாவது, ஒரு பெரிய நகரத்துக்கு தேவையான மின்சாரத்தை இந்த இன்ஜின்களால் கொடுக்க முடியும்.
இதை தவிர, இந்த ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் எதிரி நாட்டு ராணுவம் மீது தாக்குதல் நடத்த அதிநவீன ஆயுத தளவாடங்கள் இருக்கின்றன. போர்க்கப்பல், ஹெலிகாப்டர் இல்லாமலேயே இந்தக் கப்பலில் மிகப்பெரிய ஏவுகணைகளை வீசும் தளவாட வசதி உள்ளது. நீண்டநெடுந்தூரம் சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்ட தளவாடம் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் உள்ளது. அதேபோல, தன்னை நோக்கி வரும் எதிரி நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளை முன்கூட்டியே அறியும் நவீன சென்சார்கள் வசதிகள் இருப்பதுடன், அவற்றை உடனடியாக தாக்கி அழிக்கும் ஆட்டோமேட்டிக் சிஸ்டமும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.
சிம்மசொப்பனம்
இத்தகைய திறன் வாய்ந்த அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், இந்தியக் கடற்படையில் இணைவது நம் நாட்டின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சீனாவுக்கும் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது அதனை ‘மிதக்கும் நகரம்’ என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் உண்மையில் ஐஎன்எஸ் விக்ராந்த்தை ‘கடலில் மிதக்கும் எமன்’ என்றே மற்ற நாடுகள் கூறுகின்றன.