INS Vikrant: ஐஎன்எஸ் விக்ராந்த் எத்தகைய சவாலையும் சமாளிக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் திறன் கொண்டது என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படைக்கு புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த புதிய போர்க்கப்பல் தற்போதுள்ள கப்பல்களை விட 7 மடங்கு பெரியதாகும்.

விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை:

இந்திய கடற்படைக்கு பெருமை மிகு வரலாறு உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் ஒவ்வொரு இந்தியர்களின் பெருமை. இது இந்தியர்களின் பெருமை. இந்தியர்களின் திறமை, மன உறுதிக்கு உதாரணமாக இந்த கப்பல் உள்ளது. இந்தியா எதிர்கொள்ளும் சவால்களின் பதிலாக கப்பல் கடலில் உருவெடுத்துள்ளது. கேரள கடற்கரையில் இருந்து இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு விடியல் பிறந்துள்ளது.

விக்ராந்த் போர்க்கப்பல் பெரியது மற்றும் பிரமாண்டமானது. விக்ராந்த் தனித்துவமானது, விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் அல்ல, 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பு. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்திய கடற்படை, அனைத்து பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தொழிலாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்சார்பு பாரதத்தின் பெருமைமிகு அடையாளமாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது. விமானந்தாங்கி கப்பலை சொந்தமாக தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. வடிவமைப்பிலும், திறனிலும் இந்த போர்க்கப்பல் ஒரு மிதக்கும் நகரம். இந்த கப்பலின் 76 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. இந்திய கடற்படையில் மிச்சமிருந்த காலனி ஆட்சியின் குறியீட்டை இன்று அகற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.