சோவியத் யூனியன் உடைவதற்கு முன்பு கடைசியாகத் தலைமைப் பொறுப்பிலிருந்த மிகைல் கோர்பசேவ் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) அன்று காலமானார். 91 வயதான கோர்பசேவ்வின் மரணத்துக்கு ரஷ்ய அதிபர் புதின், இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கி உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். உலக அளவில் மதிப்பு பெற்றிருக்கும் கோர்பசேவ் யார்?
சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர்!
1931-ம் ஆண்டு ரஷ்யாவிலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்தார் கோர்பசேவ். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர், 1950-ம் ஆண்டு தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டார். 1953-ல் தன்னுடன் பயின்ற மாணவியான ரைசாவைத் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து, மார்க்கிஸ்ட்-லெனினிஸ்ட் கொள்கைப் பிடிப்புடன் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1985-ல் சோவியத் ஒன்றியத்தின் அதிபராக இருந்த கோன்ஸ்டன்ட்டின் (Konstantin) உயிரிழந்தார். இதையடுத்து, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவான பொலிட் பீரோவில் உறுப்பினராக இருந்த கோர்பசேவ், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கப்பட்டார். அதன் வழியாக, சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் பொறுப்பேற்றார்.
அதிபராக பொறுப்பேற்ற தொடக்கத்தில் மார்க்சியம்-லெனினிசக் கொள்கைகளைப் பின்பற்றியவர், போகப்போக தன்னை சமூக-ஜனநாயக கொள்கைவாதியாக மாற்றிக்கொண்டார். தனது ஆட்சிக்காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் பலவற்றையும் தளர்த்தினார். குறிப்பாக ஒளிவுமறைவுடன் இருந்த சோவியத் ஒன்றியத்தின் செயல்பாடுகளை வெளிப்படையாக மாற்றினார். அரசை விமர்சிக்க மக்களுக்கு முழு அதிகாரம் வழங்கினார். பத்திரிகைகளுக்கும் முழுச் சுதந்திரத்தை ஏற்படுத்தினார். அரசு விவகாரங்களில் கட்சியின் தலையீடுகளை குறைத்தார். இதன் மூலம் அரசுப் பணிகள் முழுச் சுதந்திரத்துடன் நடந்தன. இந்தியாவுடனும் நல்ல நட்புறவை ஏற்படுத்தினார்.
சாதனைகள்!
சோவியத் ஒன்றிய அரசையும், அதன் சோஷியலிஸக் கொள்கைகளையும் பாதுகாப்பதில் முதலில் உறுதியாக இருந்தார் கோர்பசேவ். பின்னர், 1986-ல் நடந்த செர்னோபில் பேரழிவை அடுத்து, அரசின் கொள்கைகளில் சில சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார். முதலில், ஆப்கன் மீதான போரை நிறுத்திக்கொண்டு, படைகளை திரும்பப்பெற்றார். அடுத்து, அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும் முடிவு செய்தார்.
பல ஆண்டுகளாக மேற்குலக நாடுகளுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் பனிப்போர் நிலவிவந்தது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னரும் பதற்றம் குறையாமலிருந்தது. இதையடுத்து, மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கம் காட்டி, கத்தியின்றி, ரத்தமின்றி பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்தப் பனிப்போரை முடிவுக்கு கொண்டுவர, அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுடன் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அமெரிக்காவுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார்.
பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்ததால், 1990-ல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார் கோர்பசேவ்!
1989-90-களில், கிழக்கு ஐரோப்பாவிலுள்ள சோவியத் ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகள் மார்சிய-லெனினியக் கொள்கைளை கைவிட்டதோடு, ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்தன. இந்தப் போராட்டங்கள், சோவியத் ஒன்றிய நாடுகளை உலுக்கியெடுத்தன. இருந்தும், `இந்தப் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்த மாட்டேன்’ என்று உறுதியாக இருந்தார் கோர்பசேவ். இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிய-லெனினிய கடும்போக்குவாதிகள், 1991 ஆகஸ்ட்டில் கோர்பசேவ்வின் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன.
சறுக்கல்கள்!
1991 டிசம்பர் மாதத்தில், கோர்பசேவ்வின் விருப்பத்துக்கு எதிராக சோவியத் ஒன்றியம் பல குடியரசுகளாக உடைந்தது. ஜனநாயக ஆதரவு போராட்டங்களால், சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகளில் தேசிய உணர்வு பரவியது. இந்தப் போராட்டங்கள், அந்த நாடுகளிடம் சுயாட்சி விருப்பத்தையும் தூண்டியதால், சோவியத் ஒன்றியம் பல குடியரசு நாடுகளானது. எனவே, சோவியத் ஒன்றியம் உடைந்ததற்கு மூல காரணம் கோர்பசேவ்தான் என்று இன்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், `கோர்பசேவ், மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கம் காட்டியதும், சோவியத் ஒன்றியம் உடையக் காரணமாக அமைந்தது’ என கம்யூனிசத் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சோவியத் ஒன்றியம் சிதிறியதால், உலக அளவில் ரஷ்யாவின் செல்வாக்கு சரிந்தது. பல்வேறு முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. இதனால் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் கோர்பசேவ். அதே நேரம், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், ஐரோப்பாவை பிளவுபடுத்திய இரும்புத்திரையை தகர்க்க மேற்கத்திய நாடுகளுடன் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அந்த ஒப்பந்தங்களின் விளைவாக பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு, மேற்கு, கிழக்கு ஜெர்மனி ஒன்றிணைந்தது. இதன் காரணமாக, ஜெர்மனியிலுள்ள மக்கள் இன்று வரை கோர்பசேவ்வை, `கோர்பி’ என்ற செல்லப் பெயரிட்டு அழைப்பதோடு, கொண்டாடியும் வருகின்றனர்!