அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல காபி ஷாப் `ஸ்டார் பக்ஸ்’. 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று இந்தியா உள்பட உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான கிளைகளை நிறுவி கொடிகட்டிப் பறந்து வருகிறது.
இந்நிலையில் ஸ்டார் பக்ஸ் நிறுவனம் ‘reinvention’ என்ற பெயரில் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தவும், புதிய புதிய காபி மற்றும் உணவு வகைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. எனவே இந்நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்ஷ்மன் நரசிம்மன், இதற்கு முன் ‘Reckitt’, ‘PepsiCo’, ‘Lysol’ போன்ற முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர். குறிப்பாக, ‘Lysol’ என்ற கிருமி நாசினி தயாரிப்பு நிறுவனத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவந்து அதன் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர். எனவே ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் சிறப்பாக பணியாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லக்ஷ்மன் நரசிம்மன் இதற்கு முன் பல நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றி இருந்தாலும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு புதிது. எனவே அக்டோபர் 1 ம் தேதி முதல் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியவிருக்கும் அவர், நிறுவனத்தைப் பற்றியும் நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் ‘reinvention’ திட்டம் பற்றியும் நன்கு அறிந்த பின்னர் அடுத்த வருடம் ஏப்ரல் 2023 இல் ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.