கொல்கத்தா: அமித்ஷா தான் மிகப்பெரிய பப்பு என்றும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இன்றி அமித்ஷாவால் அரசியல் செய்ய இயலாது என்றும் நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி.. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான இவர் மீது நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அபிஷேக் பானர்ஜியிடம் ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
அமித்ஷாவை விமர்சித்த அபிஷேக்
இந்த நிலையில், 3-வது முறையாக நேற்று அமலாக்கத்துறை அபிஷேக் பானர்ஜியிடம் நேற்று விசாரணை நடத்தியது. சுமார் 8 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜியிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தியது. இந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அபிஷேக் பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:-
அமித்ஷா தான் பப்பு
பாஜக மற்றொரு கட்சியின் தலைவரை பப்பு என்று கூறுகிறது. ஆனால், உண்மையில் அமித்ஷா தான் மிகப்பெரிய பப்பு.. மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இன்றி அமித்ஷாவால் அரசியல் செய்ய இயலாது. நிலக்கரி ஊழலுடன் சிஐஎஸ்எஃப் படையினருக்கு தொடர்பு இருக்கிறது. எல்லையில் பசு கடத்தல் நடக்கும் போது எல்லை பாதுகாப்பு படை என்ன செய்து கொண்டிருகிறது. இது பசு கடத்தல் ஊழல் கிடையாது. உள்துறை அமைச்சரின் ஊழல். உள்துறை இணை அமைச்சர் நிஷித் பிரம்னாயக் பசு திருடன்.
பாஜக முன் தலை வணங்க மாட்டேன்
பசு கடத்தல் தொடர்பான விசாரணை பசு திருடர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. சட்ட விரோதமாக ஐந்து பைசா வாங்கியிருந்ததாக யாராவது நிரூபித்தால் கூட நான் தூக்குக்கு தயராக உள்ளேன். 30 முறை கூட விசாரணைக்கு ஆஜராக நான் தயராக இருக்கிறேன். மேற்கு வங்காள மக்கள் முன் தலைவணங்க தயாராக இருக்கிறேன். ஆனால் பாஜக முன் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்” என்றார்.
அமித்ஷா மகன் குறித்து பேச்சு
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும் பிசிசிஐ செயலருமான ஜெய் ஷா, இந்தியா பாகிஸ்தான் இடையேன கிரிக்கெட் போட்டியின் போது தேசியக்கொடியை வாங்க மறுத்ததாக சர்ச்சை எழுந்தது குறித்து விமர்சித்த அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ”மேற்கு வங்க மக்களுக்கு தேச பக்தியை கற்று கொடுப்பதற்கு முயற்சிப்பதற்கு முன்பாக அமித்ஷா முதலில் தனது மகனுக்கு தேசபக்தியை கற்றுகொடுக்கட்டும்” என்று விமர்சித்துள்ளார்.
7 முறை விசாரணை
மேலும் அவர் கூறுகையில், ”மகனை விமர்சிப்பதால் எனக்கு எதிராக விசாரணை அமைப்புகளை கட்டவிழ்த்து விட்டு என்னை பயமுறுத்தி விடலாம் என்று அமித்ஷா கருதினால் அவர் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். இதுவரை என்னிடமும் எனது மனைவியிடமும் ஏழு முறை விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதன் முடிவுகள் வெறும் பூஜ்ஜியம்தான். லஞ்சம் வாங்கும் போது கேமிராவில் சிக்கிய பாஜக தலைவர்களை இதுவரை மத்திய விசாரணை அமைப்புகள் சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைக்கவில்லை” என்றார்.