ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டி:சூப்பர் 4 சுற்று இன்று ஆரம்பம்
ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்று இன்று ஆரம்பமாகிறது.
இந்த சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 4 சுற்று லீக் முறையில் நடைபெறும்.
இதற்கமைவாக , ஒவ்வொரு அணியும் தனது எதிரணியுடன் போட்டியிட வேண்டும். ஆகக்கூடுதலான போனஸ் புள்ளிகளைப் பெறும் இரு அணிகள் ஆசிய வெற்றிக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஆசியக் கிண்ணப் போட்டியில் B குழுவின் கீழ் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதல் சுற்றில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் ,இலங்கை கடும் தோல்வியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு முன்னால் இலங்கை அணியினர் அனைவரும் 105 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 08 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எவ்வாறாயினும், பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெளிப்படுத்திய ஆற்றல் இன்றைய ஆப்கானிஸ்தானுடனான போட்டி அனல் பறக்கும் என விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஹொங்கொங் அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி 155 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுப்பர் 04 சுற்றுக்கு நேற்று (02) தகுதி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 02 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணியால் 10 ஓவர் 04 பந்துகளில் 38 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.