நெல்ைல: பள்ளி பதிவேடுகளில் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் பெயருக்கு முன்னர் உள்ள முன் எழுத்தையும் (இன்ஷியல்) தமிழில் எழுதவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள செயல்முறை கடிதம்: பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும் நடைமுறையை அன்றாட வாழ்வில் கொண்டுவரவும், மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரை அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே (இன்ஷியல்) வழங்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும்.
இதற்காக மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்தலாம். மேலும் முதற்கட்டமாக எமிஸ் வழியாக பராமரிக்கப்படும் 30 மின்பதிவேடுகளில் மாணவர் மற்றும் பெற்றோர், பாதுகாவலர் பெயர்களை தமிழில் பெயர் பதிவேற்றம் செய்யும்போது அவர்கள் முன்எழுத்தையும் தமிழில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அனைத்து நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.