சனாதன தர்மம் என்றால் என்ன, ஹிந்து என்பது யார், நீங்கள் ஆர்.எஸ் எஸ் உறுப்பினரா, உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மூத்த வழக்கறிஞர் துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனாதன தர்மம் என்றால் என்ன? சனாதன தர்மத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்கள் இருக்கின்றனரா, அல்லது வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டார்களா? நீங்கள் RSS-ன் உறுப்பினரா? திராவிட இயக்கத்தின் தந்தை பெரியாரின் கொள்கைகளையும் அவர் கற்பித்தவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்கீறீர்களா..
இல்லை என்றால் ஏன்?
அமைச்சரவையின் அல்லது அரசின் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் விரும்பியதெல்லாம் பேசுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு இடம் கொடுத்துள்ளது? ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வரும் வரை திராவிடர்களுக்கு ஹிந்துயிசம் பற்றி எதுவும் தெரியாது என்பது உண்மையா? சனாதன தர்மம் பற்றி ஏதேனும் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது வெறுமனே செவிவழி செய்தி தானா? சனாதன தரமத்தை கண்டறிந்தது அல்லது எழுதியது யார்? சனாதன தர்மம் பற்றி தமிழ் இலக்கியத்தில் பேசப்பட்டுள்ளதா? திராவிட வரலாற்றில் இடம்பெற்றிருந்ததா?
சனாதன தர்மத்தை பாகிஸ்தானிலோ, ஆப்கானிஸ்தானிலோ, அல்லது உலகில் எந்த நாட்டிலாவது பின்பற்றுகிறார்களா? சனாதன தர்மத்தை கிறிஸ்தவர்களோ இஸ்லாமியர்களோ பின்பற்றுகிறார்களா? ஹிந்து என்பது யார்? ஏதேனும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் ஹிந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா? ஹிந்து என்ற வார்த்தையை கண்டறிந்தது யார், அந்த வார்த்தைக்கான அர்த்தம் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதா? பெர்சிய மொழி அகராதியில் ஹிந்து என்றால் திருடன் என பொருள்படும்படி குறிப்பிடப்பட்டுள்ளதே அது சரியா? அக்கடவுள்கள் இருக்கின்றார்கள் என்றால், எங்கு வசிக்கிறார்கள் அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகள் என்னென்ன? அவர்களுக்கு யார் உடைகளை தைத்துக் கொடுப்பது? அவர்கள் உடைகள் மற்றும் நகைகளை எங்கே வாங்குகிறார்கள்?
இந்து மதத்தில் (நான்கு வர்ணங்களை) சதுர் வர்ன தர்மாவை யார் உருவாக்கியது? நீங்கள் சதுர் வர்ண தர்மாவை பின்பற்றுகிறீர்களா,அதை கடைபிடிக்கிறீர்களா? சதுர் வர்ன தர்மா ஏன் மற்ற மதங்களால் பின்பற்றப்படவில்லை? அமைச்சரவையின் அல்லது அரசின் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் விரும்பியதெல்லாம் பேசுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு இடம் கொடுத்துள்ளது? அரசின் அல்லது அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் விரும்பியதெல்லாம் பேசுவதற்கு அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்காத போது, நீங்கள் இவ்வாறு பேசுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது ஆகாதா?
ஆகிய 19 கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் பதில் அளிக்க கோரி மூத்த வழக்கறிஞர் துரைசாமி ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மனு. மூத்த வழக்கறிஞர் துரைசாமி மறைந்த திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் அவர்களுக்காக அவர் சார்ந்த வழக்குகளில் ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் ரவி பொது நிகழ்ச்சிகளில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி சனாதன தர்மம் பற்றி பேசுவது அழகல்ல என திமுக விமர்சித்து வந்த நிலையில், தற்போது ஆர்.டி.ஐ மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த மனு கவனம் பெற்றுள்ளது. ஆளுநர் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா, மாட்டாரா என்பது பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.