இனி இவர்களுக்கும் 60 நாட்கள் விடுமுறை: மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்து உயிரிழந்தாலும் 60 நாட்கள் வரை சிறப்பு மகப்பேறு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் உள்ள பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் 12 மாதங்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை கவனிப்பதற்காகவே பேறுகால விடுப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை பிறந்து இறந்தாலும் தாய்மார்களுக்கு, 60 நாட்கள் பேறு கால விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்ப்பமடைந்த 28 வாரங்கள் முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் சிசு உயிரிழந்தால் மத்திய அரசு பெண் ஊழியர்கள் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்துடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தி 60 நாட்கள் வரை சிறப்பு மகப்பேறு விடுமுறை அளிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது குழந்தை பிறக்கும் போதே இறந்து அல்லது பிறந்து ஓரிரு நாட்களில் பிறந்த குழந்தை உயிரிழந்தால் தாய்க்கு மன ரீதியாக ஏற்படும் துயரங்களைக் கருத்தில் கொண்டும், நீண்ட நாட்கள் அந்தத் தாயின் வாழ்க்கையில் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதால் அதிலிருந்து விடுபட அவகாசம் தரும் வகையில் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுவதாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை விளக்கம் அளித்துள்ளது.

அதே சமயம் முதல் 2 குழந்தைகளுக்கு மட்டுமே இந்த தளர்வு பொருந்தும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.