இரக்கமற்ற மனித இனம்.. நூற்றுக்கணக்கான பறவைகளின் அபய குரலோடு மரத்தை சாய்த்த ஜேசிபி! கண்டனங்களால் கைது

மலப்புரம்: சாலை அமைப்பதற்காக பெரிய மரம் ஒன்று வெட்டி சாய்க்கப்பட்ட போது அதில் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

இந்த உலகத்திலேயே இயற்கையை அழிக்கும் ஓர் உயிரினம் இருக்கிறது என்றால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். ஆறுகளில் நீர்ப்பிடிப்புக்கு ஆதாரமாக இருக்கும் ஆற்று மணலை வரைமுறை இல்லாமல் எடுப்பது; தனது சுயநலத்துக்காக உயிர் வாயுவை கொடுக்கும் மரங்களை வெட்டுவது; மலைகளை உடைப்பது என மனிதன் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

இயற்கையை அழித்ததன் எதிர் விளைவுகளை இன்று மனித இனம் சந்தித்து வருகிறது. புவி வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடு ஆகியவை அதில் குறிப்பிடத்தகுந்தவை. இருந்தபோதிலும், மனிதர்களாகிய நாம் நமது சுயநலத்துக்காக இயற்கையை அழிப்பதை நிறுத்துவதாக தெரியவில்லை.

சாலை அமைக்கும் பணி

அப்படியொரு சம்பவம்தான் கடவுளின் தேசம் எனப் போற்றப்படும் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தலப்பாறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. அந்த வகையில், சாலை அமைக்க இடையூறாக இருப்பதாக கூறி ஒரு பெரிய மரத்தை வெட்டும் பணி நேற்று நடைபெற்றது.

 துடிதுடித்து இறந்த பறவைகள்

துடிதுடித்து இறந்த பறவைகள்

தொழிலாளர்கள் மரத்தை ஓரளவுக்கு வெட்டியவுடன் அதனை முழுமையாக சாய்ப்பதற்காக அங்கு ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கிருந்த மக்கள், மரத்தில் ஏராளமான பறவைகள் கூடுகட்டி இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தொழிலாளர்கள் அவர்கள் கூறுவதை சட்டை செய்யவில்லை.

இதன் தொடர்ச்சியாக, ஜேசிபி இயந்திரம் மரத்தை சாய்த்ததும் அதில் இருந்த சில பறவைகள் மட்டுமே பறந்து உயிர் தப்பின. அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் தரையில் விழுந்து துடிதுடித்து உயிரிழந்தன. மரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கூண்டுகளில் இருந்த பறவைக் குஞ்சுகளும், அவற்றுக்கு துணையாக இருந்த தாய் பறவைகளும் மனிதனின் இந்தக் கோரத் தாண்டவத்திற்கு இரையாகி விட்டன.

 வெளியான வீடியோ

வெளியான வீடியோ

பறவைகள் செத்துக் கிடக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்து பலர் கண்ணீர் வடித்து வருகின்றனர். மேலும், இந்த ஈவு இரக்கமற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் தராமல் இயற்கையோடு இணைந்தும், இயற்கையை பாதுகாத்து வரும் உயிரினமான பறவைகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்ததை பார்த்து இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த பறவை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

 நடவடிக்கை

நடவடிக்கை

இந்த விஷயம் பூதாகரமானதை அடுத்து அந்த மரத்தை வெட்டிய சாலை ஒப்பந்ததாரர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பறவைகள் இருப்பது தெரிந்தும் சிறிதும் கவலைப்படாமல் மரத்தை அகற்றிய ஜேசிபி ஓட்டுநரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மரத்தை சாய்த்த ஜேசிபி வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த நடவடிக்கை போதாது எனத் தெரிவித்துள்ள பொதுமக்கள், அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் இதுபோன்ற செயலில் ஈடுபட யாரும் முன்வர மாட்டார்கள் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.