கீவ்: கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உக்ரைனின் ஜபோரிஜியா நகரில் அமைந்துள்ள அணு மின் நிலையத்தின் மீது ரஷ்யா கடுமையானத் தாக்குதலை நடத்தியது. இதனால் அந்த அணுமின் நிலையம் கடுமையான சேதத்தை சந்தித்தது. இதன் விளைவாக அதன் அணு உலை களில் ஒன்று மூடப்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.
மேலும் அங்கு ஹைட்ரஜன் மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவு ஏற்படுவதற்கான சூழ்நிலையும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐ.நா. சார்பில் சர்வதேச அணு சக்தி முகமையின் (ஐஏஇஏ) குழு நேற்று முன்தினம் அணு மின் நிலையப் பகுதிக்குச் சென்று சேதத்தை ஆய்வு செய்தது. ஐஏஇஏ இயக்குநர் ரபேல் குரோஸி தலைமையில் இந்தக் குழு சென்றுள்ளது.
ரஷ்யா குண்டு வீசிய பகுதியில் அந்தக் குழுவினர் சோதனை நடத்தி சேதம் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்தனர். குண்டு விழுந்த இடத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அணு உலைப் பகுதிகளிலும் ஐ.நா. குழுவினர் பல மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் ரபேல் குரோஸி கூறியதாவது:
இந்த அணு மின் நிலையம் மற்றும் அணு மின் நிலைய வளாகத்தின் மீது விதிகளை மீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலமுறை இந்த விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன. எனவே இந்த அணு மின் நிலையத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.
மேலும் சில சேத மதிப்பீடுகளை நாங்கள் செய்ய உள்ளோம். பாரபட்சமற்ற, நடுநிலையான, தொழில்நுட்ப ரீதியாக சரியான மதிப்பீ்ட்டை நாங்கள் செய்வோம். இந்த சேத மதிப்பீடு இன்னும் சில நாட்களுக்கு நடைபெறும். மேலும் சில நாட்கள் இங்கு தங்கியிருக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.