புச்சாரெஸ்ட்: ருமேனியாவில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கோடீஸ்வர பெண், உடல் முழுக்க தங்க நகைகளுடன் புதைக்கப்பட்டிருப்பதை அகழ்வாராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது; மனிதர்கள் எப்போது தோன்றினார்கள் என்பன போன்ற பல மர்மங்களை உடைத்து வெளிப்படுத்தியது அகழ்வாராய்ச்சிகள் தான்.
பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பிரம்மாண்ட உயிரினமான டைனோசர்கள் கூட அகழ்வாராய்ச்சி மூலமே நமக்கு தெரியவந்தது.
பழங்கால கல்லறைத் தோட்டம்
இன்றும் உலகம் முழுக்க எண்ணற்ற அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் பல ஆச்சரியத் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும்.
அப்படியொரு சம்பவம்தான் ருமேனியா நாட்டில் நடந்திருக்கிறது. ரூமேனியாவின் ஒராடியா நகரில் கடந்த ஓராண்டாக அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. டாரி க்ரூசிலார் அருங்காட்சியகத்தின் சார்பில் இந்த அகழாய்வு நடைபெற்று வருகிறது. அப்போது அங்குள்ள ஒரு புல்வெளி நிறைந்த மைதானத்தில் அகழாய்வு நடந்த போது அது ஒரு பழங்கால கல்லறைத் தோட்டம் என்பது தெரியவந்தது.
தங்க நகைகளுடன் எலும்புக் கூடு
இதையடுத்து, அந்த இடத்தை தோண்டி அகழாய்வு செய்த போது பல அரிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில், கடந்த வாரம் அங்குள்ள ஒரு கல்லறையை அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி பார்த்த போது பிரம்மிப்பில் மூழ்கிவிட்டனர். ஏனெனில், அந்தக் கல்லறையில் உள்ள எலும்புக்கூட்டில் முழுக்க தங்க நகைகள் இருந்தன. இதனைத் தொடர்ந்து, அந்த எலும்புக் கூட்டை எடுத்து ஆராய்ச்சி செய்ததில் அது 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண் என்பது தெரியவந்தது.
ஆடம்பர வாழ்க்கை
அப்பெண் நல்ல உயரமானவராக இருந்திருக்கிறார். மேலும், அவர் இறக்கும் போது பற்கள் நல்ல நிலையில் இருந்திருக்கின்றன. மிகுந்த செல்வ செழிப்புடன் அந்தப் பெண் வாழ்ந்திருக்கிறார் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரது உடலை புதைக்கும் போது அவரிடம் இருந்த நகைகளை அவருக்கு அணிவித்து புதைத்திருக்கின்றனர். சுமார் 169 தங்க மோதிரங்களும், வளையல்களும் அவரது எலும்புக் கூட்டில் இருந்துள்ளன.
விலைமதிப்பற்ற தங்கம்
பழங்காலத்து தங்கம் என்பதால் அவை விலைமதிப்பற்றதாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, அந்த நகைகள் அனைத்தும் அருங்காட்சியத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்பெண்ணின் எலும்புகளின் மாதிரி சேகரிக்கப்பட்டு அவர் எந்த நாகரீக காலத்தில் வாழ்ந்தார் என்பதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாக ருமேனிய அரசு தெரிவித்துள்ளது.