கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மருத்துவ குணம் கொண்ட சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காத விரக்தியில் 700 மூட்டை வெங்காயத்தை விவசாயி ஒருவர் குட்டையில் வீசியுள்ளார்.
ஓசூர் அருகே சானமாவு கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் ஏழு ஏக்கரில் மருத்துவ குணம் கொண்ட சின்ன வெங்காயத்தை பயிரிட்டு விவசாயம் பார்த்துள்ளார். விளைச்சலுக்குப் பின் விற்பனைக்கு கொண்டு சென்ற விவசாயிடம், பொதுவாக இந்த வகை சின்ன வெங்காயம் 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை சந்தையில் விலை போகும் என்ற நிலையில், மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயத்தை 750 ரூபாய்க்கு வியாபாரிகள் விலைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.
அனைத்து தரப்பினரிடமும் முயற்சித்து பார்த்தும் அதற்கு அதிகமாக வெங்காயம் விலை போகாததால், விரக்தி அடைந்த விவசாயி சீனிவாசன், விளைவித்த 700 மூட்டை சின்ன வெங்காயத்தை குட்டையில் வீசியுள்ளார்.
இதனால், வேதனை அடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், காய்கறிகளை சேமித்து வைக்க, உரிய சேமிப்பு கிடங்குகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM