உலக நாடுகளின் கெடுபிடி: மீண்டும் இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்சே; வரவேற்ற அமைச்சர்கள்!

இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என்று கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் நாடு முழுவதும் பிரதமர், அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் அரசியல்வாதிகளின் வீடுகள் சூரையாடப்பட்டது. இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அவர் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் இலங்கையில் இருந்த வரை தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்தார். அவரால் போராட்டகாரர்களை ஒடுக்க முடியவில்லை. பொது மக்கள் பல நாள்கள் ஒரே இடத்தில் தங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர் கடந்த மாதம் 12-ம் தேதி இலங்கையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றார்.

இலங்கையில் இருந்து தப்பிய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்கி இருந்தார். ஆனால் கோத்தபய ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்ட குறுகிய கால விசாவை அந்நாடு நீட்டிக்க மறுத்துவிட்டது. இதனால் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அனுப்பிவிட்டு அங்கிருந்து ராஜபக்சே தாய்லாந்திற்கு சென்றார்.

ராஜபக்சே சகோதரர்கள்

தாய்லாந்து அரசும் பாதுகாப்பு காரணங்களை காட்டி ராஜபக்சேவிடம் ஹோட்டலைவிட்டு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. இதனால் சிறையில் இருப்பது போன்ற ஒரு வாழ்க்கையை ராஜபக்சே தாய்லாந்தில் வாழ்ந்து வந்தார். இங்கு இருப்பதற்கு பதில் சொந்த நாட்டிற்கு செல்லலாம் என்று ராஜபக்சே முடிவு செய்தார். இது தொடர்பாக இலங்கையில் இருக்கும் தனது சகோதரர் பசில் ராஜபக்சேயிடம் கோத்தபய ராஜபக்சே பேசினார். இதையடுத்து பசில் ராஜபக்சே கடந்த மாத இறுதியில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்து கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பி பாதுகாப்புடன் இருக்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்கேயும் அதனை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து கோத்தபய ராஜபக்சே நேற்று மாலையில் இலங்கை திரும்பினார். அவர் விமானத்தில் இருந்து கீழே இறங்கியவுடன் அவரின் கட்சி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். 52 நாள்களுக்கு பிறகு நாடு திரும்பிய ராஜபக்சே அரசின் பாதுகாப்போடு தங்க இருக்கிறார். இலங்கையில் முன்னாள் அதிபர்களுக்கு அரசு பாதுகாப்புடன் தங்க வீடு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கே அரசு கோத்தபய ராஜபக்சே தங்க கொழும்பில் வீடு ஒதுக்கி இருக்கிறது. அந்த வீட்டில் இரண்டு நாள்களாக சாதாரண உடையில் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜபக்சேயின் வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்து சூரையாடியிருந்தனர். கோத்தபய சொந்த வீட்டிற்கும் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

கோத்தபய ராஜபக்சே

கோத்தபய தனது பழைய வீட்டை பார்க்க வருவார் என்று கருதுவதால் இப்பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. தற்போது ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு கொடுக்க ராணுவம் மற்றும் போலீஸ் கமாண்டர்கள் அடங்கிய தனி பிரிவை அமைத்திருப்பதாக இலங்கை அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஜபக்சே பாதுகாப்புடன் நாடு திரும்ப ரணில் விக்ரமசிங்கே அனுமதித்திருப்பதன் மூலம் ராஜபக்சே குடும்பத்தினரை பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கின்றனர். நாடு திரும்பிய கோத்தபய ராஜபக்சேவுக்கு 2009-ம் ஆண்டு பிரபல பத்திரிக்கையாளர் லசந்தா என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதோடு கோத்தபய ராஜபக்சே மீது அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் இலங்கையில் நடந்த இனப்போரின் போது தமிழ் கைதிகளை சிறையில் சித்ரவதை செய்து கொலை செய்த வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.