கோலாலம்பூர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஆட்சியில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களில் லஞ்சம் பெற்று சொத்து குவித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் ரோஸ்மா மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோலாலம்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு 216 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரோஸ்மாவின் கணவரும் மலேசியாவின் முன்னாள் பிரதமருமான நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். தற்போது ரோஸ்மாவும் சிக்கியுள்ளார்.
இருப்பினும், லஞ்ச வழக்கில் ரோஸ்மாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பெவிலியன் குடியிருப்புகளில் மலேசிய போலீஸார் நடத்திய சோதனையின்போது கைப்பற்றப்பட்ட 2,400 க்கும் மேற்பட்ட நகைகள் மற்றும் 29 சொகுசு பைகள் இன்னும் அரசாங்க காவலில் இருப்பதாகவும் அதனை மீட்டுத் தர வேண்டும் என்றும் ரோஸ்மா கோரிக்கை வைத்துள்ளார்.