டெல்லி: ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா மாநிலம் வழங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 46 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் பதில் அளித்துள்ளார். நேற்றைய தினம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட பொழுது, அவருடன் சென்ற மாவட்ட கலெக்டர் ஜிதேஷ் பாட்டீலிடம் ‘ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசியில், ஒன்றிய அரசின் பங்கு என்ன?’ என்று அவரிடம் கேட்டார். அதற்கு அவர் தனக்கு தெரியாது என்று பதிலளித்த நிலையில், கோபமடைந்த நிர்மலா சீதாராமன், ‘நீங்கள் கலெக்டராக இருந்தும், இதுகுறித்த விபரம் உங்களுக்குத் தெரியாதா?; அரை மணி நேரத்தில் இதற்கான பதிலை அளிக்க வேண்டும்’ என்று கடிந்து கொண்டார்.
மேலும், ‘ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் ஒரு கிலோ ரூ.35க்கு வாங்கப்படுகிறது. அதில் ரூ.30 ஒன்றிய அரசு செலுத்துகிறது என்றும், ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் வைக்கவில்லை? மாலைக்குள் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுப்பேன்’ என்றும் எச்சரித்தார். ஒன்றிய அமைச்சரின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் ரேஷன் கடைகளில் ‘தெலுங்கானாவுக்கு நன்றி’ என பதாகைகள் வைக்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்திடம் இருந்து ஒன்றிய அரசு வசூலிக்கும் வரித்தொகையை பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.