சமூக வலைதளமான ட்விட்டரை ‘ஒரு வார்த்தை ட்வீட்’ ஆக்கிரமித்து ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்ட்ராக் என்ற ரயில் நிறுவனம் தங்களின் பணிகளை வெளிப்படுத்தும் வகையில், தங்களுக்குப் பிடித்த வார்த்தையாக ‘trains’ என்ற வார்த்தையை ட்வீட் செய்திருந்தது. இதையடுத்து, உலக அளவில் பலரும் தங்களுடைய கொள்கைகள், பணிகள், விருப்பங்கள், பிடித்த விஷயங்களை என ஒரு வார்த்தையில் ட்வீட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டிங்கில் சசிகலாவும் இணைந்து தனது விருப்பத்தை பதிவிட்டுள்ளார். அதன்படி, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒற்றுமை’ என
பதிவிட்டுள்ளார். அதிமுகவுக்குள் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையே சசிகலா பதிவிட்டுள்ளதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
சிறையில் இருந்து வெளியே வந்த, ஒன்றரை ஆண்டுகளாக அரசியலில் சசிகலாவுக்கு பெரிதாக ஏறுமுகம் இல்லை. அனைத்து முயற்சிகளிலும் பின்னடைவையே அவர் சந்தித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக சசிகலாவின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் ஓட ஆரம்பித்திருக்கின்றன. மிகவும் உற்சாகத்தோடு காணப்படுகிறார். இதற்கு டெல்லியின் அனுசரணையான பார்வை அவர் மீது விழுந்திருப்பதாக கூறுகிறார்கள்.
அதிமுகவில் நடக்கும் குழப்பங்களை பாஜக ஆரம்பம் முதலே விரும்பவில்லை. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், இபிஎஸ் என அனைவரும் இணைந்த அதிமுகவையே டெல்லி பாஜக மேலிடம் விரும்புகிறது. எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் அதிமுகவின் ஒற்றுமைதான் தங்களுக்கு கைகொடுக்கும் எனவும் அக்கட்சி நம்புகிறது. இதையொட்டி, சசிகலாவுக்கு க்ரீன் சிக்னல் காட்டப்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸிடமும் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக கூறுகிறார்கள்.
ஒற்றுமையாக செயல்பட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோர் ஓகே சொல்லி விட்ட நிலையில்,
மட்டும் தனது முடிவில் விடாப்படியாக இருக்கிறார். ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட மறுப்பு தெரிவித்து வருகிறார். சசிகலா, டிடிவி ஆகியோருக்கு ஓபிஎஸ் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளார். விரைவில் நேரில் சென்றும் அவர் அழைப்பு விடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலாவை பொறுத்தவரை ஆரம்பம் முதலே அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு தனது ஆதரவாளர்களிடம் அவர் கூறியிருந்தாலும், இபிஎஸ்ஸை விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள். எனவே, இபிஎஸ் சற்று இறங்கி வந்தால் அதிமுகவில் அனைத்தும் சரியாகி விடும் என்பதால், ஒற்றை வார்த்தை ட்வீட்டில் இணைந்து ஒற்றுமை என பதிவிட்டு மீண்டும் ஒற்றுமையாக செயல்பட அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.