ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்து வருவதாக, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தெரிவித்து உள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லம் முன்பாக, செய்தியாளர்களை சந்தித்து பேசிய, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில்
, அவருடைய ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.
அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கூறி வழக்கு தொடர்ந்ததாகவும் அந்த விசாரணையின் போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதாக தமிழக காவல்து றை தெரிவித்ததாகவும் சி.வி.சண்முகம் கூறினார்.
உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதாக தகவல் தெரிவித்து 21 நாட்கள் கடந்த நிலையில் தற்போது வரை அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தாதற்கு காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரிலேயே, ஓ. பன்னீர்செல்வமும், அவருடைய ஆதரவாளர்களும் அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்த சம்பவத்திற்கு திமுக தான் முழு காரணம் எனவும், சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்.
தமிழக காவல் துறை திமுகவின் தொண்டர் படையாக மாறி விட்டதாகவும், கோபாலபுரத்தில் மாவாட்டிக் கொண்டிருப்பதாகவும், சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்தார். இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்பதாகவும், அதற்குள் போலீசார் விசாரணையை தொடங்காத பட்சத்தில், அடுத்த கட்ட நடவடிக்கையாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் எனக் கூறிய சி.வி.சண்முகம், சசிகலா ட்விட்டர் பதிவு குறித்து எழுப்பிய கேள்விக்கு, அவர் யார்? என, பதில் கேள்வி எழுப்பினார்.