திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2015 ம் ஆண்டு உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் மறைந்த கே.எம். மாணி நிதித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கே.எம். மாணி ஊழலில் ஈடுபட்டதாக கூறி, அவர் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்க்கட்சி வரிசையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் எதிர்ப்பை மீறி கே.எம். மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சபைக்கு வந்தார். அப்போது கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
வரலாறு காணாத இந்த சம்பவம் தொடர்பாக தற்போதைய கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீல், முன்னாள் அமைச்சரும், தற்போதைய இடது முன்னணி ஒருங்கிணைப்பாளருமான ஜெயராஜன் உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்த சம்பவத்தில் அரசுக்கு ₹2.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி சிவன்குட்டி உட்பட 6 பேரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இம்மாதம் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த மனு மீது உத்தரவு வரும் வரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரி அமைச்சர் சிவன்குட்டி உள்பட 6 பேர் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சியாத் ரகுமான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சிவன்குட்டி உட்பட 6 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் இருப்பதால் அனைவரும் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சியாத் ரகுமான் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.