புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு சம்பவத்தில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீனில் வெளியே வந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்திலேயே மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி கொண்டு இருப்பவர்கள் சிறைத்துறையில் இருக்கக்கூடிய காவலர்கள் தான். இது வெளி உலகத்திற்கு தெரியாது. குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்கள் தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் குற்றம் புரிவதற்கு தயங்குவது கிடையாது.
அவர்களோடு இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிக்கொண்டு இருப்பவர்கள் சிறையில் பணியாற்றுபவர்கள். அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கொடுப்பதற்கும், அவர்களது குடும்பத்தை காப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறை பணியாளர்களிடம் பயங்கரமான செயல்களில் ஈடுபடக்கூடிய கைதிகளை கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு விவகாரத்தில் பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட 5 பேர் ஜாமீனில் வெளியே வந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து மேல்முறையீடு செய்யப்படும். ஆறுமுகசாமியின் அறிக்கை பரிசீலித்து வல்லுநர் குழுவின் கருத்துக்களை கேட்டு மேல்நடவடிக்கை எடுத்து அறுமுகசாமியின் அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளோம் என்றார்.