மதுரை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் நிதி நெருக்கடியில் தவிப்பதாகவும், காப்பீட்டுத் தொகையில் மருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, தமிழ்நாடு மருத்துவக் கழகம் மூலம் மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்து அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், உயிர் காக்கும் மருந்துகள் உட்பட அனைத்து வகை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் சில மருத்துவர்கள், தனியார் கடைகளில் மருந்து வாங்கிக்கொள்ளும்படி எழுதிக் கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க, அரசு மருத்துவமனை நிர்வாகங்களுக்கு உள்ளூரிலே மருந்துகளை கொள்முதல் செய்யசுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இதற்கான செலவை காப்பீட்டுத் தொகைமூலம் ஈடுகட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளிகள் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும்போது கூட, காப்பீடு அட்டை இருக்கிறதா என்று கேட்பதாகவும், இல்லாவிட்டால் உறவினர்களை அனுப்பி, காப்பீடு அட்டை வாங்கிவரும்படி மருத்துவர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இதுகுறித்து அரசு மருத்துவமனை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தற்போது தமிழ்நாடு மருத்துவக் கழகத்திடம் 10 மருந்துகள் கேட்டால், 2 மட்டுமே அனுப்புகின்றனர். அதனால், நாங்களே உள்ளூரில் ஒப்பந்தம் செய்து, மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்கிறோம்.
மருத்துவக் கழகம் கோடிக்கணக்கில் மருந்துகளை கொள்முதல் செய்வதால், சலுகை விலையில் கிடைக்கும். ஆனால், உள்ளூரில் கொள்முதல் செய்வதால், மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது. மேலும், நிர்வாக ரீதியாக வேலைப்பளுவும் அதிகம்.
இந்த மருந்துகளை வாங்க, அரசு தனியாக நிதி வழங்குவதில்லை. காப்பீட்டுத் தொகையை செலவிடும்படி கூறியுள்ளனர். காப்பீட்டுத் தொகையில்தான் மருத்துவமனைகளில் நிறைய பணிகள் நடைபெற்றன.
தற்போது அந்த தொகையை மருந்து கொள்முதலுக்குப் பயன்படுத்துவதால், மருத்துவமனைகளில் மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கின்றன. எனினும், காப்பீட்டுத் தொகையை வைத்து, மருந்து தட்டுப்பாடில்லாமல் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.
மருந்துகள் தட்டுப்பாட்டுக்கு அரசின் நிதி நெருக்கடி மட்டுமின்றி, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து மருந்து, மாத்திரைகள் மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டதும் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குநரக உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இலங்கைக்கு மருந்து அனுப்பியதால் தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவதில் உண்மை இல்லை’’ என்றார்.