கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி வைக்க எல்.முருகன் வந்திருந்தார். அப்போது மேட்டுப்பாளையத்தில் உள்ளம் தனியார் ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழக முதல்வர் என்பவர் அனைவருக்கும் சமமானவர் பொதுவானவர்.
திமுக தலைவராக விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் தமிழக முதல்வராக மக்களுக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கலாம்.
அது அவரது கடமையும் கூட அந்த கடமையில் இருந்து அவர் தவறியிருக்கிறார். இனிவரும் காலங்களிலாவது அவர் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்துக்களை சொல்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும் குஜராத் தான் போதைப்பொருட்களின் ஹப் ஆக உள்ளது என்ற அமைச்சர் பொன்முடியின் கருத்து குறித்து பதிலளித்த அவர் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
போதைப்பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை.
தமிழகத்தில் இன்று போதைப்பொருள் தலை விரித்தாடிக்கொண்டு இருக்கிறது. கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் நிலைமை சீரழிந்து இருக்கிறது.
குஜராத்திற்கு பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் வருகிறது. அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வெளியுலகத்திற்கு காட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தமிழக அரசு போல் மூடி மறைக்கவில்லை. இதுபோன்ற வீணான ஒரு அரசியலை விட்டு விட்டு கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
மேலும் தமிழக அரசு சிறப்புக்குழுவினை அமைத்து இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சீரழிந்து உள்ளது. தமிழகத்தில் காவலருக்கு பாதுகாப்பில்லை. ஜெயிலருக்கு பாதுகாப்பில்லை. சட்டம், ஒழுங்கை சீர் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல். முருகன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“