குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில், சட்டமன்றத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழுவேகத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். துவாரகா மாவட்டத்தில் நடந்த விவசாயிகளின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். “ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் விவசாயத்துக்கு 12 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளின் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்படும். பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டால் ஏக்கருக்கு 20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.
விவசாயிகளின் 2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். தற்போதைய நில அளவை முறை ரத்து செய்யப்பட்டு புதியமுறை கொண்டு வரப்படும். குஜராத்தில் முந்தைய அனைத்து அரசுகளும் விவசாயிகளின் பிரச்னையை தீர்க்கவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி அவர்களின் பிரச்னையை தீர்க்க தயாராக இருக்கிறது. 10 ஆண்டுகளேயான ஆம் ஆத்மி கட்சியால் எப்படி அதிசயத்தை நிகழ்த்த முடியும் என்று கேட்கின்றனர். ஏழைகளின் ஆசிர்வாதத்தால்தான் நாங்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு இலவச மின்சாரம், இலவச கல்வி வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள். ஊழலும், ரெளடியிசமும் வேண்டுமானால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களியுங்கள்” என்றார்.
அதோடு கிராம தலைவர்களையும் சந்தித்து கெஜ்ரிவால் பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் குஜராத்திற்கு கெஜ்ரிவால் தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே மாதம் 300 யூனிட் மின்சாரம், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் போன்ற திட்டங்களை அறிவித்துள்ளார். இதே திட்டங்களை முன் வைத்துத்தான் பஞ்சாப் மற்றும் கோவா சட்டமன்ற தேர்தலையும் ஆம் ஆத்மி கட்சி எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.