குவைத் போலீசுக்கே குல்லா போட்ட ஆந்திர மருத்துவர்கள்..! விரல்ரேகையை மாற்றி வில்லத்தனம்..!

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு, கை விரல்கள் ரேகை மாற்று அறுவை சிகிச்சை செய்து, புதிதாக விசா பெற வைத்து மீண்டும் குவைத்துக்கு அனுப்பிவைத்து பல கோடி ரூபாய் வசூலித்த கேடி டாக்டர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

குவைத் நாட்டு காவல்துறையில் இருந்து, ஆந்திரா போலீசுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வந்தது. தங்கள் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட சிலர் விரல்ரேகையை மாற்றி மோசடியாக விசா பெற்று மீண்டும் குவைத்துக்கு வருவதாகவும், ஆந்திராவை சேர்ந்த சில மருத்துவர்கள் இந்த விரல்ரேகை மோசடிக்கு உதவுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜோதி கிராமத்தைச் சேர்ந்த நாகமுனேஷ்வர் என்பவர் திருப்பதி அடுத்த சந்திரகிரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கதிரியக்க நிபுணராக உள்ளார். இவருக்கும் குவைத்தில் கட்டிட தொழிலாளியாக வேலைப்பார்த்த ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்த தொழிலாளி, தனது விசா காலாவதியானதாகவும், தான் நாடு கடத்தப்பட்டதாலும் மீண்டும் குவைத்துக்கு செல்ல இயலாமல் இலங்கை சென்று அங்கு கைரேகை அறுவை சிகிச்சை செய்துகொண்டு புதிய கைரேகையுடன் மீண்டும் குவைத்துக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை மூலம் கைரேகைகள் தற்காலிகமாக புதிய வடிவத்திற்கு மாறியதாகவும் இதனால் குவைத்தில் உள்ள அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார். இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த நாகமுனேஷ்வர், குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.

இதற்காக திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணிபுரிந்து வரும் கடப்பா மாவட்டம், சுண்டுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ரமணா என்பவரை கூட்டு சேர்த்து கொண்டார்.

பின்னர் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் குறித்து தகவல் அறிந்த நாகமுனேஷ்வர் மற்றும் வெங்கடரமணா ஆகியோர் ராஜஸ்தான் சென்று கைரேகை அறுவை சிகிச்சை செய்தனர். ஒவ்வொருவரிடமும் தலா ரூ.25 ஆயிரம் கட்டணம் வசூலித்துள்ளனர். இதையறிந்த கேரளாவைச் சேர்ந்த சிலர் நாகமுனேஷ்வரை தொடர்பு கொண்டனர்.

இதனையடுத்து கடந்த மே மாதம் முனேஷ்வர், வெங்கடரமணா கேரளா சென்று 6பேருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்து ஆளுக்கு ஒன்றரை லட்சம் வசூலித்துள்ளனர். அதன்பிறகு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஜோதி கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர், பழைய அட்லூரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா உள்பட 3 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இவ்வாறு இந்த கும்பல் பல கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குவைத் இமிகிரேஷன் துறையில் கருவிழி மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் இல்லை. கைரேகை ஸ்கேனிங் மட்டுமே உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இவர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சைக்காக விரல் நுனியில் உள்ள தோல் அடுக்கு வெட்டப்பட்டு, திசுக்களின் ஒரு பகுதி அகற்றப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தையல் போடுகின்றனர். காயம் ஏற்பட்ட ஓரிரு மாதங்களுக்குள் புதிய கைரேகை சிறிய மாற்றங்களுடன் ஏற்படும். இந்த புதிய கைரேகைகள் ஒரு வருடத்திற்கு அப்படியே இருக்கும். அதன்பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்.

குவைத்தில் பிடிபட்டால் காலாவதியான விசா இருந்தால் அந்த நபர் நாடு கடத்தப்பட்டவுடன், பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுகிறது. அதனால்தான் புதிய பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை பெறுவதற்காக அறுவை சிகிச்சையின் மூலம் புதிய கைரேகைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். இந்த மோசடி குறித்து சமீபத்தில் கண்டுபிடித்த குவைத் போலீசார், இதுகுறித்து ஐதராபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அன்னோஜிகுடாவில் உள்ள லாட்ஜ்ஜில் பதுங்கியிருந்த நாகமுனேஷ்வர், வெங்கடரமணா மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சிவசங்கர், கிருஷ்ணா ஆகிய 4பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், அறுவை சிகிச்சை கருவிகள், கையுறைகள், மருந்துகள், ஆன்டிபயாடிக் மாத்திரைகள், ஹைட்ரோகுளோரைடு ஜெல், ஊசி மருந்துகள், சோடியம் குளோரைடு கரைசல் மற்றும் பிற அறுவை சிகிச்சை கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருவதாக ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் பகவத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.