கேரளாவில் ஓணம் பண்டிகை தோவாளையில் பூ விற்பனை களை கட்டியது-தினசரி 50 டன் விற்பனை

ஆரல்வாய்மொழி :ஓணப்பண்டிகையையொட்டி  குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியுள்ளது.  தினசரி 50 டன் விற்பனையாகிறது. திருவோணம் வரும் 8ம் தேதி  கொண்டாட உள்ள நிலையில் ஆர்டர் மேலும் குவிகிறது.கேரளா மட்டுமின்றி கேரள  மக்கள் வசிக்கும் இடமெங்கும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  

இந்தாண்டு ஓண பண்டிகை கடந்த 30ம் தேதி தொடங்கியது. அன்று முதல்  மாவேலி மன்னனை வரவேற்கும் வகையில் வீடுகளில் பெண்கள் தினமும் பல  வண்ணங்களில் அத்தப்பூ கோலமிட்டு வருகின்றனர். கேரளாவை ஒட்டி உள்ள குமரி  மாவட்டத்திலும் ஓணம் களைகட்ட தொடங்கிவிட்டது. வீடுகளில் மக்கள் அத்தப்பூ  கோலமிட்டும், தெருக்களில் ஊஞ்சல் கட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஓணத்திற்கான மலர்கள் குமரி மாவட்டம்  தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து தான் கேரளாவுக்கு கொண்டு  செல்லப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட்டில் தினசரி பூக்கள் விற்பனை  ஜரூராக நடந்து வருகிறது. அதிகாலையிலேயே  மார்க்கெட்டில் குவியும் உள்ளூர்  மற்றும் கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு பூக்கள் வாங்குகின்றனர்.  தினசரி 50 டன் பூக்கள் கேரளாவுக்கு விற்பனையாகின்றன. மற்ற  நேரங்களில் தினமும் 10 டன் தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா  காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஓணத்திற்கான பூக்கள் விற்பனை தோவாளை  மார்க்கெட்டை கடுமையாக பாதித்தது. ஆனால் தற்போது கொரோனா குறைந்து கட்டுபாடுகள் விலக்கி  கொள்ளப்பட்டுள்ளதால் கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை  களைகட்ட தொடங்கி விட்டது.

வரும் 8ம் தேதி திருவோணம்  கொண்டாட உள்ள நிலையில், கேரள வியாபாரிகள் ஆர்டர் மேலும் அதிகரித்த வண்ணம்  இருக்கிறது. இதனால் தோவாளை பூ வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். இந்த முறை திருவோணத்திற்கு 200 டன் முதல் 250 டன் வரை  பூக்கள் கேரளாவிற்கு விற்பனையாகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் பூக்கள் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

நெற்று  ஒரு கிலோ மல்லி R 1200க்கும் ,பிச்சி R600 வாடாமல்லி R200க்கும், சம்பங்கி ரூ.150க்கும், அரளி  R300க்கும், பட்டன் ரோஸ் R250க்கும், பாக்கெட் ரோஸ் R50க்கும்,  மஞ்சள் கிரேந்தி R60க்கும், ஆரஞ்சு கிரேந்தி R70க்கும் என்று  விற்பனையானது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமான உயர்ந்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.