பத்தினம்திட்டா: கேரளாவில் நாய்களால் கடிக்கப்பட்டு 3 முறை தடுப்பூசி செலுத்திய பின்னரும் 12 வயது மாணவிக்கு ரேபீஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபகாலமாக, கேரளாவில் இதுபோன்று தடுப்பூசி செலுத்திய பின்னரும் ரேபீஸால் உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அச்சுறுத்தலையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
‘நன்றியுள்ள ஜீவன்’, ‘மனிதர்களின் காவலன்’ என நாய்கள் அழைக்கப்பட்டாலும் அது பல நேரங்களில் மனிதர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகின்றன. நாய்களின் எச்சிலில் இருக்கும் ரேபீஸ் எனப்படும் வைரஸ், மனிதனை ஒருசில வாரங்களிலேயயே கொன்றுவிடும் வீரியம் கொண்டது. ரேபீஸ் தடுப்பு மருந்துகள்தான் இருக்கின்றன. ஆனால், ரேபீஸ் வைரஸ் ஒரு மனிதனை தாக்கிவிட்டால் உலகின் எந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவரை காப்பாற்ற முடியாது என்பதே நிதர்சனம்.
இந்நிலையில், ரேபீஸ் அச்சுறுத்தல் கேரளாவை தற்போது ஒரு உலுக்கு உலுக்கி வருகிறது.
தெருநாய் கடித்தது
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மண்டபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மகள் ஷீனா (12) அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில், கடந்த மாதம் 14-ம் தேதி காலை கடைக்கு பால் வாங்கச் சென்ற ஷீனாவை அங்கிருந்த 2 தெரு நாய்கள் கடித்து குதறின. இதில் கால்களிலும், முகத்திலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. நாய் கடித்தது என தெரியவந்ததும், உடனடியாக ஷீனாவின் தந்தை ஹரீஷ், அவரை பத்தினம்திட்டா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
உடனடி சிகிச்சை
அங்கு ஷீனாவுக்கு முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்ததாகஇரண்டு டோஸ் தடுப்பூசிகள் சரியான தேதியில் அருகில் இருந்த ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஷீனாவுக்கு செலுத்தப்பட்டன. 4-வது டோஸ் தடுப்பூசி இந்த மாதம்10-ம் தேதி செலுத்த வேண்டி இருந்தது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சிறுமி ஷீனாவின் உடல்நிலை சற்றுபாதிக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் கடுமையான வலி இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் காய்ச்சலுக்கானமருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ரேபீஸ் பாதிப்பு
ஆனால், மாலையில் ஷீனாவின் நிலைமை மோசமானது. அவரது வாயில் இருந்து தொடர்ந்து நுரை வந்துள்ளது. கண்கள் மேல்நோக்கி சென்றிருக்கின்றன.
இதனால் பயந்துபோன அவரது பெற்றோர், பத்தினம்திட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஷீனாவுக்கு ரேபீஸ் பாதித்துள்ளதாகவும், கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறினர்.
இதையடுத்து, ஷீனா கோட்டயம் அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.
தடுப்பூசி செலுத்தியும் ரேபீஸ்
ஷீனா மட்டுமல்லாமல் கேரளாவில் நாய்க் கடிக்கு உள்ளான பலர், ரேபீஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். பலர் இறந்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும் அம்மாநிலத்தில் 20 பேர் ரேபீஸ் வைரஸ் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் பலர் முறையாக ரேபீஸ் ஊசி செலுத்திக் கொண்டவர்கள் ஆவர். இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தரம் குறைந்த அல்லது போலியான ரேபீஸ் மருந்துகளை கேரள அரசு வாங்குவதாக அங்கு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட ரேபீஸ் மருந்துகளையே அரசு வாங்குகிறது. குறிப்பிட்ட நாட்களை கடந்து ரேபீஸ் ஊசி போடுவது அல்லது நாய்கள் முகத்தில் கடித்துவிடுவது போன்ற காரணங்களாலேயே ரேபிஸ் பாதிப்பு ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார்.