திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த கோடியேரி பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனால், புதிய மாநில செயலாளராக உள்ளாட்சித் துறை அமைச்சர் கோவிந்தன் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே மீன்வளத்துறை அமைச்சர் பதவியும் காலியாக இருப்பதால் பினராய் விஜயனின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில், கோவிந்தனுக்கு பதிலாக புதிய அமைச்சராக தற்போது சபாநாயகராக இருக்கும் ராஜேஷை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. புதிய சபாநாயகர் பதவியை, தலச்சேரி தொகுதி எம்எல்ஏ ஷம்சீருக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இருவரும் வரும் 6ம் தேதி பதவி ஏற்கின்றனர்.