புதுடெல்லி: கைலாசாவில் உள்ள நித்தியானந்தா உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதால், அவரை காப்பாற்ற இலங்கை தஞ்சமடைய அனுமதி கேட்டு அந்நாட்டு அதிபருக்கு அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார் சாமியார் நித்தியானந்தா. அவ்வப்போது, இணையத்தில் தோன்றி பக்தர்களுக்குக் காட்சியளித்து உரையாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் அவருடைய உடல்நிலை மோசமடைந்து விட்டதாகவும், அவர் சமாதி நிலையை அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அடுத்த சில நாட்களில் அவர் இறந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இதை நித்தியானந்தா தரப்பினர் மறுத்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் இணையத்தில் தோன்றிய நித்தியானந்தா, ‘நான் குணமடைந்து விட்டேன். தற்போது மறுபிறவி எடுத்து உள்ளேன்,’என்று கூறினார். இந்நிலையில், கைலாசா தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் என கூறிக்கொள்ளும் ஆனந்த சுவாமி என்பவர், கடந்த மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஸ்ரீ நித்தியானந்தா பரமசிவம் சுவாமிகளின் உடல்நிலை மிகவும் மோசமான இருக்கிறது.
தற்போது கைலாசாவில் உள்ள மருத்துவ வசதிகளைக் கொண்டு அவரின் உடலுக்கு என்ன என்பதைக் கண்டுபிடிக்க மருத்துவர்களால் முடியவில்லை. தற்போதைய நிலையில், நித்தியானந்தாவுக்கு அவசர சிகிச்சை தேவை. இலங்கை அரசு அவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும். அவரின் மருத்துவத்துக்கு உதவி செய்வதுடன், அவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். கைலாசா, இலங்கையுடன் அரசு ரீதியான உறவை ஏற்படுத்த விரும்புகிறது. நித்தியானந்தாவின் மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் கைலாசா அரசே ஏற்றுக் கொள்ளும். அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் கைலாசா அரசு வாங்கிக் கொடுக்கும். அதோடு, லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அந்த அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உங்கள் நாட்டு மக்களுக்குக் கொடுத்து விடுகிறோம். நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் பட்சத்தில் நித்யானந்தா இலங்கையில் முதலீடு செய்வார். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த கடிதத்தின் உண்மை நிலை குறித்து இலங்கை அரசு இதுவரையில் எந்த தகவலும் வெளியிடவில்லை.