புதுடெல்லி: சம்ஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குஜராத் மாநில அரசின் முன்னாள் கூடுதல் செயலாளர் கே.ஜி.வன்சாரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
யூதர்களின் ஹீப்ரு மொழி வழக்கத்தில் இருந்து அழிந்து விட்டது. எனினும் இஸ்ரேல் நாட்டில் கடந்த 1948-ம் ஆண்டில் ஹீப்ரு மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. அந்த நாட்டின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்கிறது.
இதேபோல உலகின் மிக தொன்மையான சம்ஸ்கிருதத்தையும் இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். சம்ஸ்கிருதத்தின் எழுத்து, உச்சரிப்பு அறிவியல்பூர்வ மானவை. சம்ஸ்கிருதத்தை கற்றுக் கொள்வதால் குழந்தைகளின் மனப்பாட திறன் அதிகரிக்கும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப் பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “பல்வேறு மொழி களின் தாயாக சம்ஸ்கிருதம் போற்றப்படுகிறது. சம்ஸ்கிருத வார்த்தைகள் பல்வேறு மொழிகளில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் இதுவரை சம்ஸ்கிருதம் தேசிய மொழியாக அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது” என்று வாதிட்டார்
இறுதியில் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
உங்களது வாதம், கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த விவகாரம் குறித்து நாடாளு மன்றத்தில்தான் விவாதிக்க முடியும். சம்ஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க அரசமைப்பு சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.
இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. எனவே நாடாளு மன்றத்தில் விவாதிப்பது தான் பொருத்தமானது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் மனுதாரர் முறை யிடலாம். எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.