கேரளாவில் தன்னை தாக்கிய சிறுத்தையை கத்தியால் குத்திக் கொன்று உயிர் தப்பிய 43 வயது பழங்குடியினத்தவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே மாங்குளம் ஊராட்சிக்கு உப்பட்ட சிக்கனம்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலன். 43 வயது நிரம்பிய விவசாயியான கோபாலன், சனிக்கிழமை தனது தோட்ட பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கோபாலனை சிறுத்தை ஒன்று சீறிப்பாய்ந்து தாக்கியுள்ளது. கையில் கடித்த சிறுத்தை அவரை நிலத்தில் கீழே தள்ளியுள்ளது. உடலை நகத்தால் அழுத்தி பற்றிக்கொண்டநிலையில், பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாத கோபாலன், தன் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு சிறுத்தையை தலை, வயிறு பகுதிகளில் குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சிறுத்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. சிறுத்தை கடித்ததாலும் நகக் கீறல்களாலும் பலத்த காயமடைந்த கோபாலன், அடிமாலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே சிறுத்தை சில வாரங்களாக அப்பகுதியில் உலா வந்துக்கொண்டிருந்தாகவும், வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த ஆடு, கோழிகளை வேட்டையாடி வந்ததாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
கிராமவாசிகள் புகாரையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் வனத்துறையினரின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் பழங்குடியினத்தவரால் சிறுத்தை கொல்லப்பட்டுள்ளது. வனத்துறை விதிகளின்படி கொல்லப்பட்ட சிறுத்தை உடற்கூறு பரிசோதனைக்குப் பின் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தன் உயிர் காக்க சிறுத்தையை தாக்கி கொலை செய்த கோபாலன் மீது வழக்குபதிவு செய்ய வேண்டாம் என்று அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தன்னைத் தாக்க வந்த சிறுத்தையை பழங்குடியினத்தவர் கொன்ற நிகழ்வு மாநிலம் முழுக்க அனைத்து தரப்பினரிடையே பேசுபொருளாகி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM