சீன கடன் செயலி வழக்கு : பே-டிஎம், ரேசர்-பே மற்றும் கேஷ்-ஃப்ரீ ஆகிய பணபரிவர்தனை செயலி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

சீன லோன் ஆப்ஸ் மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக பெங்களூருவில் ஆறு வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் (ED) தெரிவித்துள்ளது.

சீன நிறுவனங்களால் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் கடன் செயலிகளுக்கு பணபரிவர்தனையை எளிதாக்க பே-டிஎம், ரேசர்-பே மற்றும் கேஷ்-ஃப்ரீ (PayTM, Razorpay, Cashfree) ஆகிய நிறுவனங்கள் உதவி செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நிறுவனங்களில் சோதனை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு வணிக நிறுவனங்கள் பெயரில் போலி ஐடிகள் மூலம் இந்த நிறுவனங்கள் பணபரிவர்த்தனை செய்ததற்கான விவரங்கள் சோதனையின் போது சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் மூலம் சீன லோன் ஆப் நிறுவனங்கள் பரிவர்த்தனை செய்த சுமார் ரூ. 17 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், Razorpay செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் வணிகர்கள் சிலர் அமலாக்க அதிகாரிகளால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக, விசாரணைக்கு உதவ கூடுதல் தகவல்களை தற்போது அதிகாரிகள் கோரியுள்ளனர். விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம்” என்று கூறினார்.

மேலும், அந்த நிறுவனங்களால் இயக்கப்படும் மொபைல் ஆப்ஸ் மூலம் சிறிய அளவிலான கடனைப் பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துவதில் ஈடுபட்டது தொடர்பாக பெங்களூரில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 18 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றதாக கூறினார்.

“சீன நபர்களால் இயக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அவர்களை அந்த நிறுவனங்களின் போலி இயக்குநர்களாக மாற்றியது விசாரணையின் போது தெரியவந்தது” என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீன லோன் ஆப் தொடர்பான சோதனை நடவடிக்கை தொடர்ந்து வருவதால் இதுகுறித்து மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.