சென்னை: சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைப்பதையொட்டி, சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டிகள் அதற்கேற்றவாறு தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு சென்னை காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. கவனத்துக்குரிய சாலைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி: “31.08.202 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காவல் துறை அனுமதி பெற்று பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளில் பெரும்பாலான சிலைகள் ஞாயிற்றுகிழமையன்று (செப்.4) சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய கடற்கரை ஆகிய இடங்களில் உள்ள கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சிலைகளை கரைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில், நாளை விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று மேற்படி 4 இடங்களில் உள்ள கடலில் கரைக்கப்படும் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் மட்டும் அதற்கேற்ப சில போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும், நாளை (செப்.4) மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை பெருநகரில் ஈவிஆர் சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் ரோடு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் ரோடு, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கதீட்ரல் ரோடு, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் ஹைரோடு, டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திருவொற்றியூர் ரோடு, எம்.எஸ் கோயில் ரோடு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, பேசின் பாலம், வால்டாக்ஸ் ரோடு, பழைய ஜெயில் ரோடு, ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம், கொடி மரச்சாலை, காமராஜர் சாலை, வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பு, ECR, OMR, LB ரோடு, தரமணி ரோடு, அண்ணாசாலை, பட் ரோடு, சர்தார் வல்லபாய் படேல் ரோடு மற்றும் சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேற்படி சாலைகளுக்கேற்ப தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை, வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப் பாதையில் செல்லலாம். அடையாரிலிருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள், ராமகிருஷ்ணா மட் ரோடு வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒய்ட்ஸ்ரோடு, ஸ்மித்ரோடு அண்ணாசாலை வழியாக பாரிமுனை சென்றடையலாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தாம்பரம் காவல் ஆணையரகம்: தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட கூடுவாஞ்சேரி, கீரப்பாக்கம், ஊரப்பாக்கம், வண்டலூர், தாம்பரம், சேலையூர் மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் GST சாலை வழியாக, தாம்பரம் மேம்பாலம், வேளச்சேரி மெயின் ரோடு, கிழக்கு தாம்பரம், சேலையூர் கேம்ப் ரோடு, காமராசபுரம், செம்பாக்கம், சந்தோசபுரம், மேடவாக்கம், காமாட்சி மருத்துவமனை, கைவேலி சந்திப்பு வழியாக வேளச்சேரி, விஜயநகரம் சந்திப்பு அடையும்.
மேலும், குமணஞ்சாவடி, மாங்காடு, குன்றத்தூர், அனகாபுத்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், திரிசூலம் மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஆலந்தூர் நீதிமன்றம், தில்லை கங்காநகர் சுரங்கப்பாதை, வேளச்சேரி இரயில்நிலையம் வழியாக வேளச்சேரி விஜயநகரம் அடையும். வேளச்சேரி விஜயநகரம் வந்தடைந்த விநாயகர் சிலைகள் அங்கிருந்து, 100 அடிசாலை, SRP டூல்ஸ், ராஜிவ்காந்தி சாலை, தரமணி, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று, நீலாங்கரை பல்கலை நகர் கடலில் கரைக்கப்படும்.
ஆவடி காவல் ஆணையரகம்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட திருநின்றவூரிலிருந்து விநாயகர் சிலைகள், பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், பாடி மேம்பாலம், நியூ ஆவடி சாலை, அண்ணாநகர், அண்ணா வளைவு, நெல்சன் மாணிக்கம் ரோடு வழியாக, வள்ளுவர் கோட்டம் சந்திப்பு அடைந்து அங்கிருந்து கத்தீட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காந்தி சிலை வழியாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கொண்டு சென்று அங்கு கடலில் கரைக்கப்படும்.
திருவேற்காட்டிலிருந்து விநாயகர் சிலைகள், வேலப்பன்சாவடி, வானகரம், மதுரவாயல், பூந்தமல்லி சாலை, கோயம்பேடு, 100 அடி சாலை, வடபழனி, கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வள்ளுவர் கோட்டம் சந்திப்பு அடைந்து அங்கிருந்து மேற்படி வழியாக, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடலில் கரைக்கப்படும்.
நசரத்பேட்டையிலிருந்து விநாயகர் சிலைகள், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர் சந்திப்பு, ஆற்காடு சாலை வழியாக, விருகம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வள்ளுவர் கோட்டம் வந்தடைந்து அங்கிருந்து மேற்படி வழியாக, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்கப்படும்.
மேலும், மணலியிலிருந்து புறப்படும் விநாயகர் சிலைகள், மாத்தூர், மாதவரம் வழியாக மூலக்கடை சந்திப்பு வந்தடையும், இதே போல, செங்குன்றத்தை அடுத்த காரனோடையிலிருந்து புறப்படும் விநாயகர் சிலைகள் GNT சாலை வழியாக, பாடியநல்லூர், செங்குன்றம், புழல், மாதவரம் ரவுண்டனா வழியாக மூலக்கடை சந்திப்பு அடையும்.
மூலக்கடை சந்திப்பில் வந்தடைந்த விநாயகர் சிலைகள், எருக்கஞ்சேரி, வியாசர்பாடி, பேசின்பாலம், ஸ்டான்லி மருத்துவமனை, ராயபுரம் NRT பாலம், ராஜாஜி சாலை, முத்துசாமி பாலம், கொடிமர சாலை, நேப்பியர் பாலம், காமராஜர் சாலை வழியாக, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைக்கப்படும்.
சென்னை பெருநகரம், தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட மேற்படி வழித்தடங்களில் விநாயகர் சிலைகள் கொண்டு சென்று கடலில் கரைக்க உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறும், காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.